Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ராஜீவ் காந்தி கொலை-1
2 posters
Page 1 of 1
ராஜீவ் காந்தி கொலை-1
கடந்த 20-ம் நூற்றாண்டில் உலக நாடுகளில் எத்தனையோ அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. இந்தியாவில் தேசத்தந்தை காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதமர் இந்திரா காந்தியை அவருடைய மெய்க்காவலர்களே சுட்டுக்கொன்றனர்.
ஆயினும் 47 வயதே நிறைந்தவரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவருமான ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடி குண்டாகவந்த ஒரு பெண்ணால் கொல்லப்பட்ட கொடிய சம்பவம் ரத்தத்தை உறையச் செய்வதாக இருந்தது. பிரதமர் பதவியை 7-3-1991-ல் சந்திரசேகர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
ஜுன் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெறுவதாக இருந்தது. மே 21-ந்தேதி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய ராஜீவ் திட்டமிட்டார். 21-ந்தேதி பகலில் அவர் ஆந்திராவில் பல தேர்தல் கூட்டங்களில் பேசிவிட்டு மாலை 6.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்குப் புறப்படுவதாக இருந்தார்.
ஆனால் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மறுநாள் காலை சென்னை போகலாம் என்று எண்ணினார். விருந்தினர் மாளிகைக்கு சென்று கொண்டிருந்தபோது "விமானம் சரியாகி விட்டது சென்னைக்குப் புறப்படலாம்" என்று தகவல் வந்தது. எனவே காரை விமான நிலையத்துக்குத் திருப்பச் சொன்னார்.
விமானம் 7 மணிக்குப் புறப்பட்டது. அதில் இரவு 8.26 மணிக்கு ராஜீவ் காந்தி சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் பற்றி கேட்டதற்கு "மத்தியில் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்" என்று பதிலளித்தார். பிறகு சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்குக் காரில் சென்றார்.
அங்கு இ.காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 10.10 மணிக்கு அவர் ஸ்ரீபெரும்புதூர் போய்ச்சேர்ந்தார். பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பிறகு மேடையை நோக்கிச் செல்லும்போது வழியில் கூடியிருந்தவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
வரவேற்க நின்று கொண்டிருந்தவர்களில் அரக்கோணத்தை சேர்ந்த லதா கண்ணன் (வயது 35) என்ற காங்கிரஸ் ஊழியரும் ஒருவர். அவருடன் அவர் வளர்ப்பு மகளான கோகிலா என்ற 15 வயதுச்சிறுமியும் வந்திருந்தாள். அவள் ராஜீவ் காந்தியைப் புகழ்ந்து இந்தியில் எழுதி வைத்திருந்த கவிதையைப் படித்தாள். அதை ராஜீவ் ரசித்துக் கேட்டார்.
இவர்களுடன் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு மர்மப்பெண் நின்று கொண்டிருந்தாள். சுடிதார் உடையில் இருந்த அவள் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கையில் ஒரு சந்தன மாலை இருந்தது. கோகிலா கவிதை பாடி முடித்ததும் ராஜீவ் காந்தி அவள் முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்தார்.
அவர் அங்கிருந்து நகரத் தொடங்கும்போது கையில் சந்தன மாலை வைத்திருந்த பெண் அவர் அருகே சென்றாள். மாலையை அவர் கழுத்தில் அணிவித்தாள். கண்மூடி திறப்பதற்குள் அவள் கை இடுப்பில் மறைவாக கட்டியிருந்த பெல்ட்டைத் தொட்டது. அவ்வளவுதான். பெல்ட்டுடன் கட்டியிருந்த குண்டுகள் வெடித்தன.
ராஜீவ் காந்தியும், அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்களும் உடல் சின்னாபின்னமாகச் சிதறி தரையில் வீழ்ந்தார்கள். குண்டு மிக சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சத்தம் அதிகம் கேட்கவில்லை. தவிரவும் மேடை அருகே காங்கிரசார் பட்டாசுகளைக் கொளுத்திக்கொண்டு இருந்தனர். எனவே அருகே இருந்தவர்கள் கூட குண்டு வெடித்ததை உடனடியாக உணர முடியவில்லை.
புகை மண்டலமாக இருக்கிறதே என்று ஓடிச்சென்று பார்த்தபோது பலர் உடல் சிதைந்து பிணமாகக் கிடந்த பயங்கரக்காட்சியைக் கண்டு அலறினார்கள். இந்தக் கூட்டத்துக்காக வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் கருப்பையா மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை அறிந்து ஓடோடி வந்தனர். "ராஜீவ் எங்கே? ராஜீவ் எங்கே?" என்று கதறினார் மூப்பனார்.
ராஜீவ் காந்தி தலைகுப்புற கிடந்தார். அவர் தலையின் பின்புறம், காலில் அணிந்திருந்த பூட்ஸ் ஆகியவற்றைக் கொண்டு, அவர் ராஜீவ் காந்தி என்று அடையாளம் கண்டு கொண்ட ஜெயந்தி நடராஜன் எம்.பி., தாங்க முடியாத அதிர்ச்சியும், துயரமும் அடைந்து கதறினார். இதற்குள் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அந்த இடத்திற்கு ஓடிவந்தனர். ராஜீவ் உடலைப்பார்த்து அலறித்துடித்தனர்.
நன்றி மாலைமலர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராஜீவ் காந்தி கொலை-2
ராஜீவ் காந்தி கொலை-2
ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்ற செய்தி டெல்லியில் இருந்த சோனியா காந்திக்கு இரவு 12 மணி அளவில் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிர்ச்சியால் உறைந்து போனார். ராஜீவ் காந்தியின் ஒரே மகன் ராகுல் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார்.
சோனியாவும், மகள் பிரியங்காவும் தனி விமானம் மூலம் சென்னைக்கு விரைந்தனர். இதற்கிடையே ராஜீவ் காந்தியின் உடல் வேன் மூலம் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு உடல் பரிசோதனை நடந்தது. டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவதற்காக பெட்டியில் வைக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வந்தது. கவர்னர் பீஷ்மநாராயண் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ராஜீவ் உடல் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டது.
டெல்லியில் இருந்து சோனியாவுடனும், பிரியங்காவுடனும் புறப்பட்ட தனி விமானம் சென்னை வந்து சேர்ந்தது. ராஜீவ் காந்தி உடலைப் பார்த்து சோனியாவும், பிரியங்காவும் கதறித்துடித்தனர். பின்னர் அவர்கள் வந்த தனி விமானத்திலேயே ராஜீவ் உடல் டெல்லிக்கு கொண்டு போகப்பட்டது. சோனியாவும், பிரியங்காவும் காங்கிரஸ் தலைவர்களும் உடன் சென்றார்கள்.
டெல்லிக்குக் கொண்டு போகப்பட்ட ராஜீவ் காந்தியின் உடல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆபரேஷன்கள் மூலம் உடலை டாக்டர்கள் சீரமைத்தனர். பின்னர் ராஜீவ் காந்தியின் வீட்டுக்கு உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக தீன்மூர்த்தி இல்லத்துக்கு (பண்டித நேரு வசித்த வீடு) கொண்டு போய் வைத்தார்கள்.
இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து ராகுல் டெல்லி வந்து சேர்ந்தார். தந்தையின் உடலைக்கண்டு அலறித்துடித்தார். ராஜீவ் உடல் அருகே சோனியாவும், பிரியங்காவும் துயரமே உருவாக அமர்ந்திருந்தனர். சஞ்சய் காந்தியின் மனைவி மேனகாவும் சோகத்துடன் அமர்ந்திருந்தார். பிரதமர் சந்திரசேகர் தலைமையில் மத்திய மந்திரிசபை கூடி ராஜீவ் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
7 நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பது என்றும், அரசு மரியாதையுடன் ராஜீவ் உடலை தகனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர், பூடான் மன்னர், அமெரிக்க துணை ஜனாதிபதி, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் உலகப் பிரமுகர்கள் பலர் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். 23-ந்தேதி பிற்பகல் இறுதி ஊர்வலம் நடந்தது.
முப்படை தளபதிகள், ராஜீவ் உடலை சுமந்து வந்து பீரங்கி வண்டியில் வைத்தார்கள். பிரதமர் சந்திரசேகர், முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் மற்றும் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ராஜீவ் உடலை தகனம் செய்ய, இந்திரா காந்தி சமாதி இருக்கும் சக்தி ஸ்தலத்தில் தகன மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாலை 4.45 மணிக்கு இறுதி ஊர்வலம் அந்த இடத்தை அடைந்தது.
ராஜீவ் உடலை ராகுல், நடிகர் அமிதாபச்சன் மற்றும் உறவினர்கள் தூக்கி வந்து தகன மேடையில் வைத்தார்கள். உடல் மீது சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டு, வைதீக சடங்குகள் நடந்தன. பிறகு "சிதை"க்கு ராகுல் தீ மூட்டினார். மைதானத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். மறுநாள் ராஜீவ் காந்தி அஸ்தி 34 கலசங்களில் சேகரிக்கப்பட்டது.
அலகாபாத்தில் கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும், இமயமலை சாரல் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் கரைப்பதற்காக அஸ்தி கலசங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. திரிவேணி சங்கமத்துக்கு சோனியா காந்தி சென்றிருந்தார். ராஜீவ் காந்தி அஸ்தி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர், ரெயில் மூலம் கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை பற்றி துப்புதுலக்க சிறப்பு மத்திய புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது. அந்த குழுவைச் சேர்ந்த 20 அதிகாரிகள் ராஜீவ் கொல்லப்பட்ட இடமான ஸ்ரீபெரும்புதூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். வெடித்த வெடிகுண்டு துண்டுகளை சேகரித்தனர்.
ராஜீவ் காந்தியின் உடல் அருகே சிதைந்து கிடந்த பெண்தான் கொலையாளியாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தனர். சக்தி வாய்ந்த குண்டை அவள் பயன்படுத்தி வெடிக்க செய்திருக்க வேண்டும் என்று ஊகித்தார்கள். மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் பெண்கள் அணியும் `பெல்ட்' ஒன்றும் சிதைந்து கிடந்ததை கண்டு எடுத்தார்கள். அதில் வெடிகுண்டு மருந்து நெடி வீசுவதையும் கண்டுபிடித்தனர்.
எனவே கொலையாளி அவளேதான் என்று உறுதிப்படுத்தினார்கள். ஆனாலும் அவள் யார், பெயர் என்ன என்ற விவரம் எதுவும் தெரியாமல் இருந்தது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அருகே இருந்த செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு, சப்-இன்ஸ்பெக்டர் எத்திராஜ், போலீஸ்காரர்கள் ரவி, தர்மன், பீட்டர், முருகன், பெண் போலீஸ் சந்திரா, முன்னாள் எம்.எல்.சி. முனுசாமி, லதா கண்ணன், கோகிலா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி குந்தா உள்பட 18 பேர் இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மரகதம் சந்திரசேகர், போலீஸ் டி.ஐ.ஜி. மாத்தூர், போலீஸ் அதிகாரி நாஞ்சில் குமரன் ஆகியோர் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர். டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி, ராஜீவ் காந்தி வகித்து வந்த காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா ஏற்க வேண்டும் என்றும், அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால் இந்த கோரிக்கைகளை ஏற்க சோனியா மறுத்து விட்டார். ராஜீவ் காந்தி மரணம் அடைந்ததால் இரண்டாவது கட்ட தேர்தல் மே 23-ல் இருந்து ஜுன் 12-ந்தேதிக்கும், மூன்றாவது கட்ட தேர்தல் மே 26-ல் இருந்து ஜுன் 15-ந்தேதிக்கும் தள்ளி வைக்கப்பட்டது. இந்த சமயத்தில் ராஜீவ் கொலைக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்று செய்திகள் வெளியாயின.
இதை மறுத்து விடுதலைப்புலி தளபதிகளில் ஒருவரான கிட்டு அறிக்கை விடுத்தார். "ராஜீவ் காந்தி மரணச்செய்தி எங்களுக்கு அதிகமாக அதிர்ச்சி அளித்தது. எங்களால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. இதில் எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லை" என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
நன்றி மாலைமலர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ராஜீவ் காந்தி கொலை-1
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ராஜீவ் காந்தி கொலை-1
நன்றி அக்கா மறுமொழிக்கு :”@:பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராஜீவ் காந்தி கொலை-3
ராஜீவ் காந்தி கொலை உலகம் முழுவதிலும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்தக்கொலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது தமிழக போலீசாருக்கு பெரிய சவாலாக இருந்தது. இந்த கொலையில் துப்புதுலக்கும் பொறுப்பு "ஐ.ஜி." கார்த்திகேயன் தலைமையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் துப்பு துலக்கிய விதம் மர்மப்பட மன்னன் ஹிட்ச்ஹாக் படங்களையும் மிஞ்சுவதாக இருந்தது. ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சிகளை அரிபாபு என்ற போட்டோகிராபர் படம் எடுத்துக் கொண்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவர் இறந்து போனாலும் அவருடைய கேமரா சேதம் அடையாமல் கிடந்தது.
அந்த கேமராவை போலீசார் கைப்பற்றி உள்ளே பதிவாகியிருந்த படங்களை பிரிண்ட் போட்டுப் பார்த்தனர். ஒரு படத்தில் லதா கண்ணன், கோகிலா ஆகியோருக்கு நடுவே கையில் சந்தன மாலையுடன் மர்மப்பெண் நின்று கொண்டிருந்தாள். அடுத்த படத்தில் சிறுமி கோகிலாவை ராஜீவ் பாராட்டிய காட்சி பதிவாகியிருந்தது.
அருகே அந்த மர்மப்பெண்ணின் தலை தெரிந்தது. குண்டு வெடிப்பில் ராஜீவ் காந்தியுடன் மேலும் 16 பேர் பலியாகி இருந்தனர். ஒரு பெண் தலை வேறாகவும் உடல்கள் பல துண்டுகளாகவும் சிதறிக் கிடந்தாள். சிதறிய பகுதிகளை சேர்த்து வைத்துப் பார்த்தபோது அவள்தான் அந்த மர்மப்பெண் -மனித வெடி குண்டாகப் பயன்படுத்தப்பட்டவள் என்பது தெரிந்தது.
கேமராவில் பதிவாகியிருந்த வேறு சில படங்களில் பட்டுச்சேலை அணிந்த இரண்டு பெண்கள் கூட்டத்தோடு உட்கார்ந்து இருந்தது தெரிய வந்தது. அவர்களைக் கண்டுபிடிப்பதில் போலீசார் முனைந்தனர். நிருபர் போல தோற்றமளித்த மர்ம மனிதன் ஒருவனின் படமும் பதிவாகியிருந்தது. அவனையும் போலீசார் தேடினார்கள்.
இதற்கிடையே மே 25-ந்தேதி தஞ்சை மாவட்டம் வேதாரண்யத்தில் சங்கர் என்ற விடுதலைப்புலியை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய திட்டமிட்டு தனு என்ற மனித வெடிகுண்டை தயார் செய்து அனுப்பியவன் ஒன்றைக்கண் சிவராசன் என்று அவன் வாக்குமூலம் கொடுத்தான்.
அவனிடம் இருந்த டைரியின் மூலம் நளினி, முருகன் ஆகியோரின் சென்னை ராயப்பேட்டை முகவரியும், டெலிபோன் நம்பரும் தெரியவந்தன. ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் பட்டுச்சேலை அணிந்து அமர்ந்திருந்த இரண்டு பெண்களில் நளினியும் ஒருத்தி என்பதும், இன்னொரு பெண் பெயர் சுபா என்பதும் போலீசாருக்குத் தெரிந்தது. எனவே நளினியையும், முருகனையும் பிடிக்க போலீசார் விரைந்தனர்.
ஆனால் அந்த முகவரியில் அவர்கள் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு மூளையாக செயல்பட்ட சிவராசனைப் பிடிக்க போலீசார் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டனர். அவனைக் கண்டுபிடிக்க போலீசார் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.
சிவராசன் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என்றும், இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. சிவராசனின் படம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டது. இதற்கிடையில் நளினியின் தாயார் பத்மா, சகோதரன் பாக்கியநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் நளினியும், முருகனும் வந்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சென்னை அருகே பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை போட்டனர்.
பஸ்சில் இருந்த நளினியும், முருகனும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர் என்றும், கைது செய்யப்பட்டபோது நளினி 6 மாத கர்ப்பிணி என்றும் விசாரணையில் தெரியவந்தது. போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் முருகன் கூறியதாவது:-
"நான் யாழ்ப்பாணம் மீசலை பகுதியை சேர்ந்தவன். எனக்கு சுரேஷ், சிந்து, ராஜு, தாஸ் முதலிய பெயர்களும் உண்டு. பெற்றோர் வைத்த பெயர் முருகன். 14 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். எனக்கு கடுமையான பயிற்சிகள் கொடுத்தார்கள். நான் மே 6-ந்தேதி யாழ்ப்பாணத்தில் இருந்து கள்ளத்தோணியில் ஏறி சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.
போரூர் சபரி நகரில் இருந்த ஜெயக்குமார் வீட்டில் தங்கி இருந்த சிவராசன், சுபா, தனு ஆகியோரை சந்தித்தேன். சம்பவம் நடந்த நாளன்று சிவராசன், தனு, சுபா, நளினி, பாக்கியநாதன், போட்டோகிராபர் அரிபாபு ஆகியோரும் நானும் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றோம். அங்குள்ள ஓட்டலில் மாலையில் பிரியாணி சாப்பிட்டோம்.
ஸ்ரீபெரும்புதூரில் தனுவுக்கு வெடிகுண்டு ஜாக்கெட்டை சிவராசன் மேற்பார்வையிட சுபா மாட்டிவிட்டாள். குண்டை எப்படி வெடிக்கச் செய்ய வேண்டும் என்பதை தனுவிடம் சிவராசன் விளக்கினான். குண்டு வெடிக்க செய்தால் இறந்து விடுவோம் என்பது தனுவுக்குத் தெரியும். ஆனாலும் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்ற பழிவாங்கும் கோபத்துடன் தனு இருந்தாள்.
இதற்குக் காரணம் யாழ்ப்பாணத்தில் தனுவின் தம்பியும், அண்ணனும் இந்திய அமைதிப் படையினரால் கொல்லப்பட்டனர். தனுவை கற்பழித்தனர். இதை நளினியிடம் தனு கூறியதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். இதனாலேயே கொலைத்திட்டத்தை நிறைவேற்ற அவள் சம்மதித்தாள். இத்திட்டம் நளினிக்கும் முன்கூட்டியே தெரியும்.
ராஜீவ் காந்தி வருவதற்கு முன்னதாக நாங்கள் மேடை அருகில் சென்று சுற்றிப்பார்த்தோம். தனுவுக்கு இடங்களை காட்டி சிவராசன் விளக்கினான். சிவராசன் தன்னை பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு அங்கு நின்றவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான். ராஜீவ் வருகை தரும் இடத்தில் தனு சந்தன மாலையுடன் நின்றிருந்தாள்.
இதை சிவராசன் மிகவும் உன்னிப்பாக கண்காணித்தான். அவ்வப்போது தனுவுக்கு சைகை மூலம் கட்டளை பிறப்பித்தான். சிவராசன் தன்னுடைய பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கியும் வைத்திருந்தான். குண்டை வெடிக்கச் செய்வதில் தனு தோல்வி அடைந்தால் ராஜீவ் காந்தியை கைத்துப்பாக்கியால் சுட்டுவிட சிவராசன் திட்டமிட்டிருந்தான்.
சுபா தன் கழுத்தில் சயனைடு (விஷம்) குப்பியை தாயத்து போல கட்டி தொங்கவிட்டிருந்தாள். ராஜீவ் காந்தி வந்ததும் சிவராசன், சுபாவை அழைத்துக்கொண்டு மெயின் ரோட்டுக்குச் சென்றான். நானும் நளினியும் கூட்டத்தை விட்டு நழுவினோம்.
குண்டு வெடித்த பிறகு இரவு சுமார் 10.30 மணிக்கு சிவராசன், சுபா 2 பேரும் "ஆட்டோ"வில் ஏறி திருவள்ளூர் சென்றனர். நானும், நளினியும் காரில் ஏறி விட்டிற்கு திரும்பி விட்டோம். அதிகாலையில் சுபாவும், சிவராசனும் வந்தார்கள். காலையில் பத்திரிகைகளில் செய்தி வந்ததைப் பார்த்ததும் சுபாவும், சிவராசனும் வீட்டை விட்டுச் சென்றுவிட்டனர்.
நானும், நளினியும் திருப்பதிக்கு சென்றோம். தமிழ்நாட்டிற்கு மே மாதம் ராஜீவ் காந்தி வரும்போது கொலைத் திட்டத்தை நிறைவேற்ற சிவராசனுக்கு விடுதலைப்புலிகள் மேலிடம் கட்டளை பிறப்பித்து இருந்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, சிவராசன் மே மாதம் முதல் வாரம் தமிழ்நாட்டிற்கு வந்தான்."
இவ்வாறு முருகன் தனது வாக்குமூலத்தில் கூறி இருந்தான்.
நன்றி மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராஜீவ் காந்தி கொலை-4
சென்னை ஆழ்வார்திருநகரில் பதுங்கியிருந்த ஒற்றைக்கண் சிவராசனும், சுபாவும் இனியும் சென்னையில் இருந்தால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று நினைத்தனர். அதனால் சென்னையிலிருந்து தப்பிச்செல்ல என்ன வழி என்று யோசித்தனர். சில விடுதலைப்புலிகளின் உதவியுடன் டேங்கர் லாரிக்குள் மறைந்து கொண்டு ரகசியமாக பெங்களூருக்குச் சென்றார்கள். 29-6-1991-ல் பெங்களூர் போய்ச் சேர்ந்தனர்.
அங்கு தலைமறைவாக இருந்த அவர்கள் 1 மாத காலம் போலீஸ் கண்ணில் படாமல் அங்கும் இங்கும் திரிந்தனர். பிறகு கோனேகுண்டே என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கினர். இதுபோல் பல விடுதலைப்புலிகள் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தனர்.
பெங்களூர் புறநகரில் உள்ள இந்திரா நகர் காலனியில் விடுதலைப்புலிகள் ஒரு ஆடம்பர பங்களாவில் தங்கி இருப்பதாக போலீசுக்குத் தகவல் கிடைத்தது. உடனே சென்னையில் இருந்து சி.பி.ஐ. குழுவினர் 15 பேர் பெங்களூருக்கு விரைந்தார்கள். அந்த பங்களாவை முற்றுகையிட்டார்கள். அந்த பங்களாவில் 3 அறைகள் இருந்தன. அதை ஒரே நேரத்தில் உடைத்துக்கொண்டு அதிகாரிகள் உள்ளே புகுந்தனர்.
அங்கு விடுதலைப்புலிகள் சயனைடு தின்று மயங்கி கிடந்தனர். அதில் ஒருவன் சிறிது நேரத்தில் இறந்தான். அவனது பெயர் அரசன். இன்னொருவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 3 தினங்களில் இறந்து போனான். அவனது பெயர் குளத்தான் என்று தெரியவந்தது. அதே பகுதியில் இன்னொரு வீட்டில் பதுங்கி இருந்த மிரேஷ் (18) என்ற விடுதலைப்புலி போலீசாரிடம் சிக்கிக் கொண்டான்.
கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டம் மாலவகள்ளி தாலுகா முத்தத் கிராமத்தில் ஒரு வீட்டில் விடுதலைப்புலிகள் தங்கி இருந்தனர். அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தபோது 5 விடுதலைப்புலிகள் `சயனைடு' தின்று இறந்து கிடந்தனர். 4 பேர் மயக்கம் அடைந்து கிடந்தார்கள். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஒருவன் இறந்தான். அதே தாலுகாவில் உள்ள பிரோட்டா என்ற ஊரிலும் ஒரு வீட்டில் விடுதலைப்புலிகள் பதுங்கி இருந்தனர்.
அங்கு போலீசார் சென்றனர். அதற்குள் வீட்டில் இருந்த 6 விடுதலைப்புலிகள் சயனைடு தின்று செத்தனர். 2 பேர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கர்நாடக மாநிலத்துக்குள் பல ஊர்களில் விடுதலைப்புலிகள் தங்கி இருப்பதும் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் தற்கொலை செய்வதும் சர்வசாதாரணமாக நடந்தது.
எனவே சிவராசனும், சுபாவும் கர்நாடகத்தில்தான் இருக்க வேண்டும் என்று "சி.பி.ஐ" போலீசார் கருதினார்கள். எனவே அங்கு தங்களது வேட்டையை தொடர்ந்தார்கள். 19-8-1991-ந்தேதி அன்று பெங்களூர் அருகே கோனே குண்டே என்ற இடத்தில் உள்ள காலனியில் ஒரு வீட்டில் சந்தேகப்படும் படியாக நபர்கள் தங்கி இருப்பதாக பால்கார பெண், போலீசுக்கு தகவல் கொடுத்தாள்.
உடனே அந்த வீட்டை போலீசார் கண்காணிக்கத் தொடங்கினார்கள். வீட்டில் தங்கியுள்ள விடுதலைப்புலிகளை உயிரோடு பிடிக்கவேண்டும் என்பதற்காக டெல்லியில் இருந்து கமாண்டோ படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். 20-ந்தேதி அந்த பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டார்கள். வீட்டைச்சுற்றி சுமார் 200 அடி தூரத்தில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
`திடீர்' என்று வீட்டிற்குள் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. போலீசார் திருப்பி சுட்டனர். இரவு 7 மணிக்கு தொடங்கி சுமார் 1/2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பிறகு வீட்டிற்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. எனவே கமாண்டோ படை வீரர்கள் 8 பேர் வீட்டின் கூரை வழியாக வீட்டிற்குள் புகுந்தார்கள்.
அந்த வீடு ஒரே அறை மட்டுமே கொண்டிருந்தது. உள்ளே 7 பேர் இறந்து கிடந்தனர். இதில் 5 பேர் ஆண்கள். இருவர் பெண்கள். ஒரு ஆணின் தலையில் மட்டும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட காயம் இருந்தது. மற்ற 6 பேரும் "சயனைடு" விஷம் தின்று செத்துக்கிடந்தார்கள். பெண்களில் ஒருத்தி மரத்தினால் செய்யப்பட்ட செயற்கை காலை பொருத்தி இருந்தாள்.
உடனே சி.பி.ஐ. டைரக்டர் விஜயகரன், ஐ.ஜி. கார்த்திகேயன், பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆர்.ராமலிங்கம் ஆகியோர் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டார்கள். தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்தவன் ஒற்றைக்கண் சிவராசன் என்பதை கார்த்திகேயன் உறுதி செய்தார். பெண்களில் ஒருத்தி சுபா என்பதையும் கண்டுபிடித்தார்கள். சிவராசனும், சுபாவும் அருகருகே பிணமாக கிடந்தனர்.
சிவராசன் பேண்ட், கறுப்பு நிற பனியன் அணிந்திருந்தான். சிவராசன் சயனைடு அருந்தியதுடன் துப்பாக்கியாலும் சுட்டுக்கொண்டான். அவனது வலது கண்ணுக்கு மேல் நெற்றியில் குண்டு பாய்ந்திருந்தது. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தபோது குண்டு துளைத்ததால் அவனது செயற்கை கண் பிதுங்கி கீழே விழுந்து கிடந்தது.
சுபா வெள்ளை நிற குட்டைப் பாவாடையும், கறுப்பு நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்திருந்தாள். காதில் சிவப்பு நிற கம்மலும், காலில் வெள்ளிக்கொலுசும், மெட்டியும் போட்டிருந்தாள். பின்னர் 7 பேரின் பிணங்களும் பிரேத பரிசோதனைக்காக பெங்களூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ராஜீவ்காந்தியைக் கொலை செய்து விட்டு 91 நாட்கள் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த சிவராசன், சுபா ஆகியோரின் வாழ்க்கை ராஜீவ் காந்தி பிறந்த தினமான ஆகஸ்டு 20-ந்தேதி தற்கொலையில் முடிவடைந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராஜீவ் காந்தி கொலை-5
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிடிபட்டவர்களை அடைத்து வைக்க பூந்தமல்லி சப்-ஜெயில் பலத்த பாதுகாப்பு கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது. 14 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவர் 18 அடி உயரத்துக்கு உயர்த்திக் கட்டப்பட்டது. மேலே கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டன. கூடுதலாக 10 சிறை அறைகள் கட்டப்பட்டன.
இங்கு நளினி, முருகன் உள்பட ராஜீவ் கொலையையொட்டி கைதானவர்கள் அடைக்கப்பட்டனர். சி.பி.ஐ. பிடித்து வைத்து விசாரித்து வந்த நளினியின் தங்கை கல்யாணி விடுவிக்கப்பட்டாள். ராஜீவ் கொலை வழக்கில் புதிதாக விஜயன் என்கிற பெருமாள் விஜயன் (வயது 26), பாஸ்கர் என்கிற வேலாயுதம் (55) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.
மாமனார் -மருமகனான இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள்தான். அகதிகளாக இந்தியா வந்தவர்கள். கொடுங்கையூரில் தங்கி இருந்தார்கள். இவர்களது வீட்டு சமையல் அறையில், தரைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த `வயர் லெஸ்' கருவியை புலனாய்வு போலீசார் கைப்பற்றினார்கள். இந்த வயர்லெஸ் கருவி மூலம் இலங்கையில் இருக்கும் விடுதலைப்புலிகளுடன் சிவராசன் பேசி இருக்கிறான்.
ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பும், கொலை நடந்த பிறகும் இங்கு சிவராசன் வந்து தங்கிச் சென்று இருக்கிறான் என்ற தகவல் கிடைத்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் நீதிபதியாக முதலாவது அடிஷனல் செசன்சு நீதிபதி எஸ்.எம்.சித்திக் நியமிக்கப்பட்டார்.
இந்த தனி செசன்சு கோர்ட்டு சென்னை கோர்ட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலையாளியான தனுவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் பக்கமுள்ள கொடியங்காடு பகுதியைச் சேர்ந்த மிராசுதார் சண்முகம் (40) என்பவரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவரது தோட்டத்தில் ஏராளமான வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அவரை தனி ஹெலிகாப்டர் மூலம் வேதாரண்யம் அழைத்துச்சென்று சோதனை போட்டனர். அவரது தோட்டத்தில் பெட்டிபெட்டியாக பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினார்கள்.
பிறகு மிராசுதார் சண்முகத்தை அங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்க வைத்தார்கள். சுற்றுலா விடுதி அருகில் உள்ள மரத்தில் மிராசுதார் சண்முகம் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். மிராசுதாரை போலீசார் அடித்து கொன்று தொங்க விட்டுவிட்டதாக அவரது மனைவி பவானி ஜனாதிபதிக்கு தந்தி கொடுத்தார்.
பிறகு நடந்த பிரேத பரிசோதனையில் மிராசுதார் சண்முகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக டாக்டர் அறிக்கை கொடுத்தார். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் (எல்.டி.டி.இ.) பிரபாகரன் உள்பட 41 பேர் மீது தனிக்கோர்ட்டில் 20-5-92 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
"ஒற்றைக்கண்" சிவராசன் தனு, சுபா, கோடியக்கரை மிராசுதாரர் சண்முகம் உள்பட 12 பேர் தற்கொலை செய்து கொண்டனர். எல்.டி.டி.இ. தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் இலங்கையில் இருந்தனர். எனவே இவர்கள் 3 பேரும் "பிரகடனம் செய்யப்பட்ட குற்றவாளிகள்" என்று அறிவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் நளினி, அவள் கணவன் முருகன் உள்பட 26 பேர் மீது மட்டும் வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு முடிவு செய்தது. குற்றம் சாட்டப்பட்ட 26 பேர் விவரம் வருமாறு:- 1. நளினி (வயது 33) நர்சு பத்மாவின் மகள். 2. முருகன் (28) நளினியின் கணவன். விடுதலைப்புலி. 3. சின்னசாந்தன் (33) 4. சங்கர் (30) 5. விஜயானந்தன் (47) 6. சிவரூபன் என்கிற சுரேஷ்குமார் (26) 7. கனகசபாபதி (76) 8. ஆதிரை (23) கனகசபாபதியின் பேத்தி.
9. ராபர்ட் பயாஸ் (31) 10. ஜெயக்குமார் (30) 11. சாந்தி (30) ஜெயக்குமாரின் மனைவி 12. விஜயன் (32) 13. செல்வலட்சுமி (31) விஜயனின் மனைவி. 14. பாஸ்கரன் (62) விஜயனின் மாமனார். 15. சண்முக வடிவேலு (53) 16. ரவிச்சந்திரன் என்ற ரவி (30) தமிழர் மீட்புப்படைத் தளபதி. 17. சசீந்திரன் என்கிற மகேஷ் (27) 18. பேரறிவாளன் என்ற அறிவு (24) ஜோலார் பேட்டையைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி.
19. இரும்பொறை (35) திருச்சி. 20 பத்மா (56) நர்சு. சென்னை ராயப் பேட்டையைச் சேர்ந்தவர். 21. பாக்கியநாதன் (31) நர்சு பத்மாவின் மகன். அச்சக அதிபர். 22. சுபா சுந்தரம் (50) போட்டோ கிராபர். 23. தனசேகரன் (55) லாரி அதிபர். 24. ரங்கன் (30) ஒற்றைக்கண் சிவராசனின் கார் டிரைவர். 25. விக்கி என்கிற விக்னேசுவரன் (33) 26. ரங்கநாத் (53) பெங்களூர் தொழில் அதிபர்.
மாலை மலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராஜீவ் காந்தி கொலை-6
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது:-
"அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியதால் ராஜீவ் காந்தி மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு விரோதம் இருந்தது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே போர் நடந்து வந்தது.
அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பினார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. முன்னதாக இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த 1987-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார்.
டெல்லி அசோகா ஓட்டலில் தங்கியிருந்த தன்னை கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியதாக பிரபாகரன் குற்றம் சாட்டினார். "ராஜீவ்காந்தி என் முதுகில் குத்திவிட்டார்" என்று கூறினார். யாழ்ப்பாணத்தில் புலேந்திரன், குமரப்பா உள்பட 17 பேர்களை அமைதிப்படையினர் பிடித்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `திலீபன்' உண்ணாவிரதம் இருந்தார்.
இந்தப் பிரச்சினையில் விடுதலைப்புலிகளுக்கு உதவ ராஜீவ்காந்தி மறுத்துவிட்டார். இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 17 விடுதலைப்புலிகளும் சயனைடு விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். இதனால் ராஜீவ் காந்தி மீது பிரபாகரனுக்கு இருந்த கோபம் அதிகரித்தது. பின்னர் வி.பி.சிங் பிரதமரானார்.
அவர் ஆட்சி கவிழ்ந்து, 1991-ல் தேர்தல் வருவதாக இருந்தது. ராஜீவ் காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஒப்பந்தத்தை அமுல்படுத்தி விடுவார் என்ற அச்சம் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது. இதனால் ராஜீவ் காந்தியை தீர்த்துக்கட்ட விடுதலைப்புலிகள் திட்டம் வகுத்தனர். இதன் பிறகு, 1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலி முருகனை யாழ்ப்பாணத்தில் இருந்து பொட்டு அம்மான் அனுப்பி வைத்தார்.
இந்திய மக்களிடம் சகஜமாக பழகி காரியத்தை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று பொட்டு அம்மான் உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் வசித்த நர்சு பத்மா, நளினி ஆகியோரிடம் நன்றாக பழகி முருகன் அக்குடும்பத்தில் ஒருவரானார். இதன் பிறகு 1991-ம் ஆண்டு மே மாதம் ஒற்றைக்கண் சிவராசன் தமிழ்நாட்டுக்கு வந்தான்.
அவனுடன் சின்னசாந்தன், தனு, சுபா, டிரைவர் அண்ணா, விஜயன், சங்கர் ஆகிய விடுதலைப்புலிகளும் சென்னைக்கு வந்தனர். கொடுங்கையூரில் உள்ள ஜெயகுமார் வீட்டில் சிவராசன் தங்கினான். தனுவும், சுபாவும் அங்கு தங்கினார்கள். அங்கு "வயர்லெஸ்" கருவி அமைக்கப்பட்டது. "ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களை எப்படி நெருங்கிச் சென்று கொலை செய்வது" என்பதற்கு ஒத்திகை பார்க்க சிவராசன் திட்டமிட்டான்.
8-5-1991 அன்று வி.பி.சிங் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசுவதாக இருந்தார். அந்த கூட்டத்தை ஒத்திகைக்களமாக சிவராசன் பயன்படுத்திக் கொண்டான். 8-5-1991 அன்று வி.பி.சிங் சென்னை நந்தனம் பொதுக்கூட்டத்தில் பேசினார். சிவராசன் பத்திரிகையாளர்கள் அமரும் இடத்தில் உட்கார்ந்து கொண்டான்.
அங்கு தனு, சுபா, நளினி, அரிபாபு, பேரறிவாளன், முருகன் ஆகியோர் வந்திருந்தனர். தனு கூட்டத்தோடு கூட்டமாக சென்று வி.பி.சிங்கிற்கு மாலை அணிவித்தாள். இதில் அவளுக்கு வெற்றி கிடைத்தது. இதுபற்றி பொட்டு அம்மானுக்கு, தனுவும், சுபாவும் கடிதம் எழுதினார்கள். மே மாதம் 2-ந்தேதி பேரறிவாளன் வயர்லெஸ் கருவியை இயக்க ஒரு எக்சைடு பேட்டரியை சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தான்.
பின்பு தனு இயக்க இருக்கும் மனித வெடிகுண்டிற்கு 2 பாட்டரிகளையும் சிவராசனுக்கு வாங்கிக் கொடுத்தார். ராஜீவ் காந்தி தமிழ்நாட்டுக்கு 21-ந்தேதி வருகிறார் என்று 19-ந்தேதியே பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. இதை சிவராசன் தெரிந்து கொண்டான். மறுநாள் தனுவுடன் சிவராசன் மைலாப்பூரில் உள்ள கல்யாணி நர்சிங் ஹோம் சென்றான்.
அங்கு நர்சாக இருக்கும் பத்மாவிடம் தனுவுக்காக "புரூபன் கேப்ஸ்" என்ற மாத்திரையை வாங்கினான். "ராஜீவ் காந்திக்கு அணிவிக்க ஒரு மாலையை வாங்கிக்கொண்டு நாளை 5 மணிக்கு வா" என்று அரிபாபுவிற்கு சிவராசன் உத்தரவிட்டான். இதேபோல வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டில் நளினியை பிற்பகல் 3 மணிக்கு தயாராக இருக்கும்படி சிவராசன் கூறினான்.
அடையாறில் வேலை பார்க்கும் நளினி 21-ந்தேதி அரை நாள் லீவு எடுத்துக்கொண்டு வில்லிவாக்கம் வீட்டிற்கு வந்துவிட்டாள். அரிபாபுவும் அண்ணாசாலையில் உள்ள கைவினைப்பொருள் விற்பனை நிலையத்தில் ஒரு சந்தன மாலை வாங்கிக்கொண்டு, பிராட்வே பஸ் நிலையத்திற்கு வந்தான். தனது நண்பரின் கேமராவையும் வாங்கிக்கொண்டு அங்கு தயாராக காத்திருந்தான்.
கொடுங்கையூரில் உள்ள ஜெயகுமார் வீட்டிற்கு சிவராசன் வந்தான். அங்கு குர்தா, பைஜாமா ஆடையை சிவராசன் அணிந்து கொண்டான். 9 எம்.எம். கைத்துப்பாக்கி ஒன்றை ஒரு துணிப்பையில் (ஜோல்னா பை) வைத்துக்கொண்டான். அந்த பையை ஜெயகுமாரின் மனைவி சாந்தி தைத்துக் கொடுத்திருந்தாள்.
இதன் பிறகு நேராக கொடுங்கையூரில் உள்ள விஜயன் வீட்டிற்கு சிவராசன் சென்றான். அங்கு தனு, சுபா ஆகியோர் தங்கி இருந்தனர். சிவராசன் வந்ததும் தனு பெல்டில் குண்டை கட்டிக்கொண்டு, மேலே சுடிதாரை அணிந்து கொண்டாள். இந்த சுடிதார் புரசைவாக்கத்தில் தைக்கப்பட்டதாகும். இதன் பிறகு சுபா, தனு, சிவராசன் ஆகியோர் வில்லிவாக்கம் சென்று நளினியை பார்த்தனர்.
நளினியுடன் இவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்கள். 5 மணிக்கு பிராட்வே பஸ் நிலையத்திற்கு 4 பேரும் போய்ச்சேர்ந்தனர். அங்கு மாலையுடன் தயாராக காத்திருந்த அரிபாபுவை சந்தித்தனர். பிறகு காஞ்சீபுரம் பஸ்சில் ஏறி ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றனர்.
இரவு 7 மணிக்கு சென்றடைந்த அவர்கள் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். பிறகு பூ வாங்கிக்கொண்டு பொதுக்கூட்டம் நடக்கும் மேடை அருகே வந்தனர். சுபா, நளினி இருவரும் மேடை முன்பு பொது மக்களோடு தரையில் அமர்ந்து கொண்டனர். சிவராசன் நிருபர் போல நின்று கொண்டான்.
நன்றி மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராஜீவ் காந்தி கொலை-7
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையில் மேலும் கூறப்பட்டு இருந்ததாவது:-
"21-5-1991 இரவு, விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்த ராஜீவ் காந்தி, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சென்னையிலிருந்து புறப்பட்டு, இரவு 10.10 மணிக்கு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு போய்ச் சேர்ந்தார். அங்குள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, சிவப்பு கம்பளம் விரித்த இடத்திற்கு வந்து இறங்கினார்.
மேடை நோக்கி சென்றார். வழியில் போடப்பட்ட மாலைகள், சால்வைகளை ராஜீவ் காந்தி சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்டார். அப்போது கோகிலா என்ற சிறுமி, ராஜீவ் காந்தியைப் புகழ்ந்து இந்தியில் எழுதப்பட்ட கவிதை ஒன்றை படித்தாள். கோகிலாவை ராஜீவ்காந்தி தட்டிக் கொடுத்தார். ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிப்பது போல் வந்த தனு, இடுப்பில் கட்டியிருந்த சுவிட்சை அழுத்தி வெடி குண்டை வெடிக்கச் செய்தாள்.
குண்டு வெடித்தபோது, ராஜீவ் காந்தி, தனு, போட்டோ எடுத்துக்கொண்டிருந்த அரிபாபு, கோகிலா உள்பட பிணமாக கிடந்த அரிபாபு அருகே, அவன் பயன்படுத்திய கேமிராவும் கிடந்தது. (அந்த கேமிராவில் பதிவாகி இருந்த சிவராசன், தனு, சுபா, நளினி ஆகியோரின் புகைப்படங்கள்தான் கொலையில் துப்பு துலக்க உதவின.) ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து, சிவராசன், நளினி, சுபா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் ஊருக்குள் விரைந்தோடினர்.
அங்கு ஒரு வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்தனர். பிறகு 3 ஆட்டோக்களில் மாறிமாறி பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்தனர். பின்பு, கொடுங்கைïர் சென்று ஜெயகுமார் வீட்டில் தங்கினர். மறுநாள் காலையில், பக்கத்து வீட்டில் அமர்ந்து ராஜீவ் கொலை செய்யப்பட்ட செய்தியை படித்தனர்.
அரிபாபுவின் கேமிராவில் இருந்த போட்டோக்களை வைத்து, கொலையாளிகளை சி.பி.ஐ. தேடி வந்தது. எனவே, சிவராசன், சுபா ஆகியோரை பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் செல்ல சிலரை விடுதலைப்புலிகள் இயக்கம் அனுப்பி வைத்தது. ஆனால், வரும் வழியில் அவர்கள் கடலில் மூழ்கி இறந்து விட்டனர்.
கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் சிவராசன் தனது பொருட்களை வைத்து இருந்தான். அவற்றை 27-7-1991-ல் சி.பி.ஐ. கைப்பற்றியது. அங்கு சிக்கிய டைரியில் எல்லோரது பெயர்களும், மற்றும் பல விவரங்களும் இருந்தன. பின்னர் டேங்கர் லாரி மூலம் சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூருக்கு தப்பிச்சென்றனர்.
16-8-1991 அன்று பெங்களூர் கோனேகுண்டே என்ற இடத்தில் உள்ள வாடகை வீட்டிற்கு சிவராசன் கோஷ் டியினர் குடியேறினார்கள். 18-8-1991 அன்று போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். 19-8-1991 அன்று சுபா சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாள். சிவராசன் தனது துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
சென்னை செசன்சு கோர்ட்டு வளாகத்தில் இந்த வழக்கை நடத்தினால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது சிரமம் என்றும், மற்ற கோர்ட்டுகளுக்கு வரும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவார்கள் என்றும் சி.பி.ஐ. கருதியது. எனவே, பூந்தமல்லி கோர்ட்டுதான் இதற்கு சரியான இடம் என்று சென்னை ஐகோர்ட்டும், தமிழக அரசும் முடிவு செய்தன.
இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி கோர்ட்டு வளாகத்தில் புதிய விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 26 கைதிகளும் தங்குவதற்கு பாதுகாப்புடன் ஜெயில் அறைகள் அமைக்கப்பட்டன. ஜெயிலில் இருந்து தனிக்கோர்ட்டுக்கு சுரங்கப்பாதை வழியாக கைதிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. நீதிபதி முன்னால் குற்றவாளிகள் கூண்டுக்குள்ளேயே இருந்து பதில் சொல்லும் வகையில் கோர்ட்டு அமைப்பு செய்யப்பட்டிருந்தது.
3-1-1993 முதல் பூந்தமல்லி கோர்ட்டில் விசாரணை தொடங்கியது. தனிக்கோர்ட்டு நீதிபதி சென்னையில் இருந்து அவ்வப்போது பூந்தமல்லி சென்று கைதிகளின் காவல் நீடிப்பை செய்து வந்தார். 3-3-1993 முதல் பூந்தமல்லி தனிக்கோர்ட்டு நிரந்தரமாக செயல்படத்தொடங்கியது. மே மாதம் 5-ந்தேதி முதல்கட்ட விசாரணை தொடங்கியது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் உள்ளது என்று சி.பி.ஐ. தரப்பில், கோர்ட்டில் வாதாடப்பட்டது. சி.பி.ஐ. பப்ளிக் பிராசிகிïட்டர் ஜேக்கப் டேனியல் தமது வாதத்தில், ஏன் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார், சதித்திட்டம் எவ்வாறு உருவாயிற்று என்று விளக்கினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
"இந்த நூற்றாண்டில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தனித்தன்மை உடையது. இந்தியத் தலைவர் ஒருவரை, பிற நாட்டினர் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்தது இதுவே முதல் தடவை. 1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அமெரிக்கா சென்றார். "மனித குலத்திற்கு சேவை செய்யும் வகையில் இந்தியாவை உருவாக்குவேன்" என்று அவர் பேசினார். 1991-ல் அவர் மீண்டும் பிரதமராக வாய்ப்பு இருந்தபோது, பயங்கரவாத செயலுக்கு பலியாக்கப்பட்டு விட்டார்".
இவ்வாறு சி.பி.ஐ. வக்கீல் கூறினார்.
"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுத்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாது" என்று, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் எஸ்.துரைசாமி உள்பட பல வக்கீல்கள் தனிக்கோர்ட்டில் வாதம் செய்தனர். "ஒரு அரசுக்கு எதிராக சதி செய்தால், அல்லது பயங்கரவாதத்தில் ஈடுபட்டால் மட்டுமே தடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும்.
தனிப்பட்ட மனிதரான ராஜீவ் காந்தியை கொல்ல சதித்திட்டம் நடந்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் `தடா' சட்டத்தின் கீழ் இந்த வழக்கை பதிவு செய்தது தவறு" என்று, வக்கீல் எஸ்.துரைசாமி கோர்ட்டில் கூறினார். பொட்டு அம்மான், அகிலா என்ற பெயர்களில் எவருமே இல்லை என்றும், இவர்கள் கற்பனை கதாபாத்திரங்கள் என்றும், அப்படி இருக்க, சதித்திட்டம் எவ்வாறு உருவாயிருக்க முடியும் என்று நளினி தரப்பில் வாதிடப்பட்டது.
"தனு (மனித வெடிகுண்டு) தனது உடலில் பெல்டை கட்டிக்கொண்டிருந்தாள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவள் பெல்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பஸ்சில் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வரப்பட்டாள் என்பதை ஏற்க முடியாது" என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை நிராகரித்துவிட்டு, குற்றச்சாட்டுகளை தனிக் கோர்ட்டு பதிவு செய்தது. இந்த முதல் கட்ட விசாரணைக்கு மட்டும் பத்திரிகை நிருபர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர், சாட்சிகள் விசாரணையின்போது நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராஜீவ் காந்தி கொலை-8
ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை, பல்வேறு தடங்கல்களுக்குப்பிறகு, 19-1-1994-ல் தனிக்கோர்ட்டில் தொடங்கியது. அதாவது, கொலை நடந்த 31 மாதங்களுக்குப்பிறகு சாட்சிகள் விசாரணை தொடங்கியது. முதல் சாட்சியாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் விசாரிக்கப்பட்டார்.
இதற்கிடையில், 26 பேர் மீதும் `தடா' சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தது தவறு என்று ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்தது. நீதிபதி எஸ்.எம்.சித்திக்கை மாற்றவேண்டும் என்று நளினி தாக்கல் செய்த மனுவையும், ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. `தடா' சட்டத்தின் கீழ் விசாரணை செய்யக்கூடாது என்றும், தனிக்கோர்ட்டு இந்த வழக்கை பகிரங்கமாக விசாரிக்க வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கு விசாரணை நடைபெறும்போதே தனிக்கோர்ட்டு நீதிபதியாக இருந்த நீதிபதி எஸ்.எம்.சித்திக் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். எனவே, இந்த வழக்கை நீதிபதி வி.நவநீதம் விசாரித்தார். வழக்கு விசாரணை ரகசியமாக நடந்ததால், விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த வழக்கில் 28-1-1998 அன்று நீதிபதி நவநீதம் தீர்ப்பு அளித்தார். நளினி உள்பட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்ததாவது:-
"குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், இந்த மிருகத்தனமான, கொடூரமான கொலையை செய்த 26 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 26 பேரும் சாகும் வரை தொங்கவிடப்படவேண்டும். தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த பின்னர் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
தீர்ப்பு மொத்தம் 2 ஆயிரம் பக்கங்களில் இருந்தது. இதுபோன்ற பெரிய தீர்ப்பு, இந்தியாவில் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை. ஒரே வழக்கில் 26 பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது இந்திய வரலாற்றில் இதுவே முதல் தடவை. மகாத்மா காந்தி கொலை வழக்கை விசாரிக்க 1 ஆண்டு காலம் ஆனது. இந்திரா காந்தி கொலை வழக்கை விசாரிக்க 2 ஆண்டு ஆனது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பு சொல்ல 7 ஆண்டுகள் பிடித்தன.
தண்டனை அடைந்தவர்களில் நளினி, அவரது தாயார் நர்சு பத்மா, நளினியின் சகோதரர் பாக்கியநாதன், நளினியின் கணவன் முருகன் ஆகிய 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு, பூந்தமல்லி விசேஷ சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 பேரும், இரும்பு கிரில் போடப்பட்ட பாதை வழியாக சிங்கம், புலிகளை சர்க்கஸ் கூடாரத்திற்கு கொண்டு செல்வதைப்போல கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டனர்.
தீர்ப்பு எப்படி இருக்குமோ என்று நளினி, அவரது தாயார் நர்சு பத்மா, மற்றொரு பெண் செல்வலட்சுமி ஆகியோர் பதற்றத்துடன் காணப்பட்டனர். மரண தண்டனை என்று தீர்ப்பு கூறப்பட்டதும் 3 பேரும் கதறி அழுதனர். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 15 பேர் விடுதலைப்புலிகள். 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பெங்களூரைச் சேர்ந்தவர். 5 பேர் பெண்கள். ஒரே வழக்கில் 5 பெண்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படுவதும் இதுவே முதல் தடவை.
சாதாரணமான கொலை வழக்குகளில், ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய முடியும். ஆனால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேர் மீதும், "தடா" சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்ததால், தண்டனை பெற்றவர்கள் "சுப்ரீம்" கோர்ட்டில் மட்டுமே அப்பீல் செய்ய முடியும். நளினி உள்பட 9 பேர் சார்பில் வக்கீல் எஸ்.துரைசாமி இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்.
தீர்ப்பு குறித்து அவர் கூறுகையில், "சி.பி.ஐ. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைதான் தீர்ப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம். இதற்காக அரசியல் அல்லாத கமிட்டி அமைக்கப்பட்டு நிதி திரட்டப்படும் என்று தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலையில் புலன் விசாரணை நடத்திய சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுத்தலைவர் கார்த்திகேயன், தீர்ப்பு பற்றி தனது கருத்தை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
"மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.) சிறப்பு புலனாய்வு குழு, ராஜீவ் காந்தி கொலையின் உண்மையை கண்டறிய ஒருமித்து செயல்பட்டது. அதற்குரிய பலன், இந்த தீர்ப்பில் கிடைத்து விட்டது. சி.பி.ஐ. விசாரணையின் முடிவு சரியே என்று இந்த தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. இந்திய போலீஸ் துறையாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை புலனாய்வு குழு நிரூபித்துள்ளது. நீதி கிடைத்துள்ளது. "வாய்மையே வெல்லும்", "சத்தியமே ஜெயதே" என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.
தீர்ப்பு கூறப்படுவதையொட்டி, கோர்ட்டைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தீர்ப்பு கூறப்பட்டதும், கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்குக் கொண்டு போகப்பட்டனர்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum