சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி Khan11

ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி

Go down

ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி Empty ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி

Post by ராகவா Mon 16 Sep 2013 - 19:03

[left]
ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி Gajasamharar

"கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள்"


தென்னாடுடைய சிவனே போற்றி!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!


கடகளிறு என்பது மதயானையைக் குறிக்கும். யானையின் தோலைத் தன் மீது உடையாக அணிந்தவள் என்பது அதன் பொருள். எந்த யானை? அந்த யானையின் தோலினை அம்மை உடையாக அணிந்தாளா. இவற்றைத் தெரிந்து கொள்ள நாம் அட்ட வீரட்டான தலங்களுக்குப் போக வேண்டும். இந்தப் பாடல் வரிகளை ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தனது மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழில் கொடுத்திருக்கிறார்.

பிள்ளைத் தமிழ் என்பது தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. இவ்விலக்கியத்தை வழியாக வைத்து இங்கு மீனாட்சி அம்மையைப் பாடியிருக்கிறார் குமரகுருபர சுவாமிகள். பாடல் தலைவன் அல்லது தலைவியை முதலாக வைத்துப் பத்து பருவங்களை உருவாக்கி நூறு ஆசிரிய விருத்தங்களால் பாடப்படுவது பிள்ளைத் தமிழ். இதில் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகையில் பாடுவார்கள். சுவாமிகள் இங்கு நமக்குத் தந்திருப்பது பெண்பால் பிள்ளைத் தமிழ்.

பெண்பால் பிள்ளைத் தமிழில் காப்பு, செங்கீரை, தாலம், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல் என பத்து பருவங்களை வைத்துப் பாடுவார்கள். ஒவ்வொரு பருவமும் பத்து பாக்களைக் கொண்டதாக இருக்கும். இது குறித்த ஒரு இலக்கணப் பாடல்:

"கடுங் கொலை நீக்கிக் கடவுள் காப்புச்
செங்கீரை, தால், சப்பாணி, முத்தம்
வாரானை, முதல் வகுத்திடும் அம்புலி
சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்னப்
பெறுமுறை ஆண்பாற் பிள்ளைப் பாட்டே.

அவற்றுடன்
பின்னைய மூன்றும் பேதயர்க் காகா;
ஆடும் கழங்கு அம்மானை, ஊசல்
பாடும் கவியால் பகுத்து வகுப்புடன்
அகவல் விருத்தத் தான்கிளை அளவாம்."

இது ஆண்பால், பெண்பால் பிள்ளைத் தமிழின் இலக்கணம்.

1) காப்புப் பருவம்: இஃது இரண்டு மாதக் குழந்தையைக் காக்குமாறு இறைவனிடம் வேண்டுவது.
2) செங்கீரை: ஐந்தாம் மாதம் ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி இரு கரங்களால் நிலத்தில் ஊன்றி தலை நிமிருந்து முகம் அசைய ஆடுதல்.
3) தாலப் பருவம்: எட்டாம் மாதம் 'தாலேலோ' என்று நாவசைத்துப் பாடுதல்.
4) சப்பாணி: ஒன்பதாம் மாதம் இரு கரங்களையும் சேர்த்து கைதட்டும் பருவத்தைப் பாடுதல்.
5) முத்தப் பருவம்: பதினொன்றாம் மாதம், குழந்தையை முத்தம் தர வேண்டிப் பாடுதல்.
6) வருகைப் பருவம்: ஓராண்டு ஆகும்போது குழந்தை தளிர்நடை பயிலும்போது பாடுதல்.
7) அம்புலிப் பருவம்: ஒன்றேகால் ஆண்டு ஆகும்போது குழந்தைக்கு நிலவைக் காட்டிப் பாடுதல்.
8) அம்மானை: குழந்தையை அம்மானை ஆடும்படியாகப் பாடுதல்
9) நீராடற் பருவம்: ஆற்று ஓடையில் நீராடும்படி பாடுதல் 10) ஊசல் பருவம்: ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டிப் பாடுதல்

கடைசி மூன்றும், அம்மானை, நீராடல், ஊசல் ஆகியவை ஐந்து முதல் பத்து வயது வரை நடக்கும் செயல்களாகப் பாடுதல்.

காப்புச் செய்யுள் முதலில் விநாயகரை வணங்கி, திருமால், சிவபெருமான், சித்தி விநாயகப் பெருமான், அறுமுகப் பெருமான், பிரம்ம தேவர், தேவேந்திரன், திருமகள் லக்ஷ்மி, கலைமகள் சரஸ்வதி, துர்க்கை, சப்தமாதர்கள், தேவர்கள், முப்பத்து மூவர் ஆகியோரைப் பாடியபின் செங்கீரைப் பருவத்தைப் பாடுவது என்பது இலக்கண மரபு.

ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தனது மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழில் இந்த வரிசையில் பாடி வரும்போது காப்புச் செய்யுளில் சப்தமாதர்கள் எனும் தலைப்பில் பாடுகின்ற வரியில் இந்தத் தலைப்பு வருகிறது. இதில் திருமால், சிவன், முருகன், இந்திரன், பிரம்மன், ராமன் ஆகியோர் செய்த சாதனைகளை சக்தி தெய்வங்களின் பாங்காக வைத்து அந்த சிறப்புகளைக் கொண்ட அன்னை என்று புகழ்ச்சி செய்து பாடிவருகிறார். 

அப்படி இந்த சப்தமாதர்கள் செய்த சாதனைகள்தான் என்ன? அட்டவீரட்டான தலங்களில் ஒன்றான வழுவூரில் சிவபெருமான் கஜமுகாசுரனை வதம் செய்து, அவன் வயிற்றைக் கிழித்து வெளிவந்து அவன் உடலைத் தன்மீது போர்த்திக் கொண்ட நிகழ்வை இன்றைய தலைப்பு குறிக்கிறது. இந்த காரியத்தைச் செய்தவர் சிவபெருமான் என்றாலும், அவருடைய செயலை மகேஸ்வரியாம் பார்வதிக்குக் கொடுத்து சக்தியைப் புகழ்ச்சி செய்கிறார் சுவாமிகள். கடலைத் தூர்த்தவன் இராமன், நாராயணனின் அவதாரம். இங்கு அந்தச் செயல் நாராயணியின் செயலாகக் குறிக்கப் பெறுகிறது. கடல் எரியச் செய்தவன் ஆறுமுகன், அசுரர்களை வதம் செய்த போது, ஆனால் அது இங்கு கெளமாரியின் செயலாக விளக்கப் படுகிறது. கற்பக மரத்தினை மாலையாய் அணிந்த செயல் இந்திராணிக்கும், சிங்கத்தை அடக்கிய செயல் காளிக்கும், வேத நூல்களிலிருந்து ஞானம் பெருவதை அபிராமி அம்மையிடமும், பன்றி வடிவம் தாங்கி கொம்பினால் கடலுக்குள் சென்று பூமியை மீட்டுவந்த வராக அவதாரச் செயலை வாராகியின் செயலாகவும் வர்ணிக்கும் பாங்கு சிறப்புடையது.

இங்கு சக்தியின் மேலாதிக்கம்தான் உலகின் எல்லா செயல்பாடுகளையும் இயக்கி வருகிறது என்பதை விளக்குகின்றன இந்த செயல்கள் எல்லாம். சிவனோ, நாராயணனொ, பிரம்மனோ, இந்திரனோ, முருகனோ செய்தாலும் அதனதன் சக்தி உடனிருந்து அவற்றை இயக்குதல் பொருட்டு அனைத்தும் சக்தியின் செயலாகக் கருதப்படுகிறது. 

இந்தப் பாடல் மூலமும், இன்றைய தலைப்பின் மூலமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு வழுவூரில் நடந்த கஜ சம்ஹார நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். சிவ ஆலயங்களில் அட்ட வீரட்டானம் என்பது எட்டு இடங்களில் சிவபெருமான் தனது சம்ஹாரங்கள் மூலம் தன் வலிமையை நிலைநிறுத்தியதைக் கூறும் இடங்களாகும். அட்ட வீரட்டானத் தலங்கள் எவை?
ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி Bikshadanar

எம சம்ஹாரம் நடந்தது திருக்கடவூரில்
தக்ஷன் வதம் நடந்தது திருப்பறியலூரில்
பிரம்மன் சிரமெடுத்த தலம் திருக்கண்டியூர்
ஜலாந்தரன் வதம் நடந்த இடம் விற்குடி
திரிபுராந்தகன் வதம் திருவதிகை, திருக்கோயிலூர்
காம தகனம் ஆன இடம் திருக்குறுக்கை,
கஜ சம்ஹாரம் ஆன இடம் திருவழுவூர்.

உள்ளது உணர்வாய் உயிர் ஓவியம் கொண்டவனே
அள்ள அள்ள அருள் தரும் ஆனந்த ஐயனே
கொள்ளை போகுதே என் மனம் கொடும் கூற்றுவனும் நடுங்கிடுவான்
மெள்ள மெள்ள நீ வந்திடாதே, கடுகவே வந்தெனை காப்பாயே
ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தியே!

ஓம் தத் சிவ மகேஸ்வராய வித்மஹே
வேத மார்தாண்டாய தீமஹி
தன்னோ கஜ சம்ஹார மூர்த்தி ப்ரஜோதயாத்.

கடவுளை மறுப்பது, கடவுளை எதிர்ப்பது, கடவுளை நிந்திப்பது, ஆன்மீக உணர்வுகளை அவமதிப்பது, அவன் இல்லை என்று பரப்புவது, புராண இதிகாசங்களை இழித்துப் பேசுவது இவையெல்லாம் "நான்" எனும் அகந்தை உணர்வின் வெளிப்பாடுகளே!

இத்தகைய அகந்தை உணர்வுகளுக்கு மருந்து "கஜசம்ஹாரமூர்த்தி" மட்டுமே.

நான் எனும் அகந்தையை யானைக்கு ஒப்பிடுவர். கருவூரில் இருந்த எறிபத்த நாயனார் அகந்தையின் உருவகமான மன்னனின் பட்டத்து யானையை கடிந்து, பாகர் ஐவரையும் கொன்றது இந்த நோக்கில்தான்.

ஆன்மீக உணர்வுக்கு தடைக்கல் "நான்" எனும் அகந்தையே. தன்னுடைய குறைகளையெல்லாம் நீக்கிவிட்டாலும், "தான்" எனும் அகந்தை அவனை அழிவிலேயே கொண்டு செல்லும்.

மெத்த படித்தேன் எனும் அகந்தை ஒருவனை இறைவன் அடியிணையைத் தேடுதலைத் தடுத்துவிடும். நான் எனும் அகந்தையை இறைவன் தாமரை மலர்களில் விட்டுவிட்டால் மோட்சம் அவனை ஏற்றுக் கொண்டுவிடும்.

"நான்" எனும் அகந்தை எப்போது ஒருவனுக்கு வரும் என்பதை யாரும் சொல்ல முடியாது. அது வராமல் தடுக்க ஒரே வழி கஜ சம்ஹார மூர்த்தியை வழிபடுதல் மட்டுமே. தன்னை அழித்து, என்றும் நிலைபெறச் செய்யும் மாயமூர்த்தியே கஜ சம்ஹார மூர்த்தி.

இனி வழுவூரைப் பற்றியும் கஜசம்ஹாரக் காட்சிகளையும் சற்று பார்க்கலாம். இந்த வழுவூர் எனும் தலம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் இருக்கிறது. எலந்தங்குடி எனும் கிராமத்தைத் தாண்டியதும் சாலையில் ஒரு அம்புக்குறி போட்டு வழுவூர் செல்லும் பாதை என்றிருக்கும். அதில் 1 கி.மீ. போனால் இந்த வழுவூர் வீரட்டானக் கோயிலை அடையலாம். அட்ட வீரட்டானத் தலங்களில் இது ஆறாவது வீரட்டானம். இங்கு அருளாட்சிபுரியும் ஈஸ்வரன் கஜசம்ஹாரமூர்த்தி என வழங்கப்படுகிறார்.

அதாவது கஜமுகாசுரனை வதம் செய்த இடம். சிவபெருமானுக்கு 64 விதமான உருவங்கள் உண்டு என்பது நமது புராணங்கள் கூறும் செய்தி. மகேஸ்வரர் என வழங்கப் படுபவர்கள். இங்கு சுவாமியின் பெயர் கிருத்திவாசர், அம்பாள் இளங்கிளைநாயகி. இந்த ஆலயம் கட்டி சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கக்கூடும். இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை திருநாவுக்கரசர் வைப்புத் தலமாகப் பாடியிருக்கிறார். திருமூலரும் இவ்வாலயம் குறித்துப் பாடியுள்ளார்.
ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி Bikshada

இவ்வூர் தலபுராணத்தைப் புரட்டினோமானால் அனேக பல புராணக் கதைகளுடன் தொடர்புடையதாகக் காணப் படுவதை கவனிக்கலாம். தேவர்கள் அடிக்கடி யாருடைய சாபத்துக்காவது ஆளாவது வழக்கம் என்பதை நாம் பல புராணங்களில் காண்கிறோம். அதன் பிறகு சிவபெருமானோ அல்லது மகாவிஷ்ணுவோ தலையிட்டு அவர்களது சாபத்தை நீக்கப் போராடியதாகவும் புராணங்கள் விவரிக்கின்றன. அப்படி தேவர்களுக்கு துருவன் இட்ட சாபம் ஒன்று உண்டு. அந்த சாபத்தால் அவர்கள் வலிமை குறைந்து பலவீனப்பட்டுப் போயினர்.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமிழ்தம் எடுக்கத் துணிந்தனர். அந்த நேரத்தில் அவர்கள் பலவீனமானவர்களாக இருந்த காரணத்தால் பாற்கடலை அவர்களால் மட்டும் கடைய முடியவில்லை. ஆகவே அவர்கள் அசுரர்களின் தயவை நாடவேண்டியதாயிற்று. இந்த அமிழ்தம் அருந்தினால் அமரத்துவ நிலை அடையலாம். ஆகவே அதை அடைய இரு தரப்பாருக்கும் ஆசைதான். இவர்களை அவர்கள் ஏமாற்றிவிடலாம் என்றும், அவர்களை இவர்கள் ஏமாற்றி அமிழ்தத்தைக் கைப்பற்றிவிடலாம் என்கிற திட்டத்தில் இரு தரப்பாரும் சேர்ந்து கொண்டு மந்தர மலையை நட்டு, வாசுகிப் பாம்பினால் கடைய ஆரம்பித்தார்கள். ஆனால் அப்படி கடையத் தொடங்குமுன்பாக இருவருக்கும் ஒரு ஒப்பந்தம் உருவானது. அதன்படி அமிழ்தம் கிடைத்தவுடன் ஆளுக்குப் பாதி என்று முடிவாகியது.
ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி Biksha1

தேவர்களுக்கு முழுவதையும் தாங்கள் எடுத்துக் கொள்ள ஆசைதான், ஆனால் என்ன செய்வது. அசுரர்களின் தயவு இல்லாமல் பாற்கடலைக் கடைவது என்பது முடியாத காரியமல்லவா? ஒப்புக் கொண்டார்கள். பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். இவர்கள் கடையக் கடைய அதிலிருந்து பல பயங்கரமான ஜீவராசிகள் வெளிவரத் தொடங்கின. பயந்து போனார்கள். இப்படி வெகு காலம் பல தீயவைகள் வெளிவந்த பிறகு நல்லவைகளும் வெளிவரத் தொடங்கின. காமதேனு என்கிற விரும்பிய பொருள் அனைத்தையும் தரக்கூடிய அபூர்வ சக்தி படைத்த பசு வெளிவந்தது. உச்சைஸ்ரவஸ் எனும் இறக்கைகள் கொண்ட பறக்கும் குதிரைகள் வெளிவந்தன. ஐராவதம் எனும் வெள்ளை யானை வெளிவந்தது. கல்பக விருக்ஷம் எனும் நினைத்ததைக் கொடுக்கும் புனிதமான மரம் வெளிவந்தது. கெளஸ்துபம் எனும் பெருமாளின் அணிகலன் வந்தது. வருணி எனும் இறக்கைகள் கொண்ட தேவதை வெளிவந்தது. மகாலக்ஷ்மி, சந்திரன் போன்ற எண்ணற்ற பெரு செல்வங்கள் வந்தபடி இருந்தன.

அசுரர்களுக்குக் கொண்டாட்டம். தேவர்களுக்கும் பேராசை. இவை அனைத்தையும் இந்த அசுரக் கூட்டத்துக்குத் தெரியாமல் தாங்கள் எடுத்துக் கொண்டு விடலாம் என்று. இருந்தாலும் ஒப்பந்தப்படி இருவரும் அவற்றைச் சமமாகப் பிரித்துக் கொள்ள சம்மதித்தனர். எப்படி பங்கு பிரிப்பது. எப்போதும் பங்கு பிரிப்பதில் சண்டை வருவதுதானே இயல்பு.

தேவேந்திரனான இந்திரன் கல்பகவிருக்ஷத்தையும் ஐராவதம் எனும் வெள்ளை யானையையும் விரும்பி எடுத்துக் கொண்டான். அசுரர்களின் ருசியே தனி அல்லவா? அவர்கள் உச்சிரவாசு எனும் இறக்கை முளைத்த குதிரையை எடுத்துக் கொண்டனர். காமதேனு எனும் பசு மட்டும் தான் விரும்பியவரிடம் போக முடிவெடுத்தது. அது வசிஷ்ட முனிவரிடம் போய்ச்சேர்ந்தது. 

கெளஸ்துபம் மகாவிஷ்ணுவின் மார்பை அலங்கரிக்கப் போகிறேன் என்று அவரிடம் போய்விட்டது. பாற்கடலில் இருந்து வெளிவந்த மகாலக்ஷ்மியும் கெளஸ்துபத்துடன் மகாவிஷ்ணுவுக்கு மாலை அணிவித்து அவரை மணாளனாக ஏற்றுக் கொண்டு அவரோடு இணைந்து கொண்டாள். சந்திரனோ, சிவபெருமானின் முடிமீது அமர்ந்து ஒளிர்விடத் தொடங்கினான்.

இப்படி எண்ணற்ற செல்வங்கள் வெளிவந்த போதும் இன்னும் அமிழ்தம் மட்டும் வெளிவரக் கானோமே என்று இரு தரப்பாரும் மாய்ந்து மாய்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். இப்படி அவர்கள் முழு மூச்சுடன் மூச்சிறைக்கக் கடைந்த சமயம் கடல் பிளந்து கொண்டது. தாமரை மலர்வது போல அது மெல்ல மெல்ல விரிந்து அதிலிருந்து தன்வந்த்ரி எனும் மருத்துவக் கடவுள் வெளிப்பட்டது. அதன் பொன்னிற மேனி முழுவதும் கடல் நீர் பொட்டுப் பொட்டாக மிளிற, கையில் ஒரு பொற் கலசத்தை ஏந்திக் கொண்டு, அதில் அமிழ்தம் மேல் மட்டம் வரை தளும்பி ஆட வெளிவந்தது. 
ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி Vazhuvoor

அவ்வளவுதான். பஸ் வந்து நின்றதும் இடம் பிடிக்கப் பாய்ந்து ஏறும் பயணிகளைப் போலவும், வீட்டு வாயிலில் எறிந்த இலைக்குப் பறக்கும் நாய்கள் போலவும், அசுரர்களும் தேவர்களும் அந்த தன்வந்த்ரி மீது பாய்ந்தனர். அந்த தன்வந்த்ரி இவர்களைக் காட்டிலும் புத்திசாலி அல்லவா? அவர் என்ன செய்தார் தெரியுமா? அவர் அமுத கலசத்தைத் தாங்கிக் கொண்டு விண்ணில் பறக்கத் தொடங்கினார்.

விடுவார்களா நமது அசுரர்களும் தேவர்களும், அவர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். யார் முந்திச் செல்வது என்பதில் போட்டி, நீயா நானா என்ற அவசரம். நாயாய் பறப்பது இதுதானோ? இரு பிரிவினருக்கும் அமுத கலசம் தங்களுக்கு வேண்டும் என்கிற வேகம். அமிழ்தம் கிடைத்தால் ஆளுக்குப் பாதி பாதி என்று போட்டு ஒப்பந்தம் காற்றில் பறந்து போய்விட்டது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் பரந்தாமன். இந்த உலகத்தின் நன்மைக்காகத் தான் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கருதினார். இந்த அமிழ்தம் அக்கிரமத்தையே தொழிலாகக் கொண்ட அசுரர்கள் கையில் மாட்டிவிடக்கூடாது, அப்படி மாட்டிவிட்டால் காலம் முழுவதும் இவர்களின் அக்கிரம தொல்லைகள்தான். ஆகவே எப்படியாவது அமுத கலசத்தை அவர்களிடமிருந்து காப்பாற்றிவிட வேண்டுமென்று முடிவு செய்தார்.

அடுத்த நொடி மகாவிஷ்ணு ஓர் அழகிய மோகினியின் வடிவை எடுத்துக் கொண்டார். அடடா! அழகு என்றால் அத்தனை அழகு. இருண்ட அந்தக் கடற்பிரதேசம் முழுவதும் பளிச்சென்று பிரகாசம். அந்த மோகினியின் எழில், அவள் நிறம், அவள் அணிந்திருந்த மெல்லிய ஆடை, நகைகள், அன்ன நடை பயின்று அவள் தேவர்கள், அசுரர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்த இடத்தில் இடையில் புகுந்து நின்றாள். இந்த காட்சியை பாகவதம் எப்படி வர்ணிக்கிறது தெரியுமா?

"அந்த அழகிய இளம் பெண், மிக அழகான ஆபரணங்கள் உடைகள் அணிந்துகொண்டு, அவளுடைய அழகிய தொடைகள் யானையின் தந்தங்களைப் போல வெண்மையாக வழவழப்பாக மின்னிட, அன்னம் நடைபயிலுவதைப் போல நடந்து, நடக்கும் போது அவள் மெல்லிய இடை ஒடிந்துவிடுமோ என்று ஐயப்படும் அளவில், கருத்த விரிந்த அவள் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய, இடையில் அணிந்த மணிகள் கிண்கிணி போல் ஒலியெழுப்ப, தங்கக் குடங்களைப் போன்ற தனங்கள் அசைய, அந்த களத்திற்குள் நுழைந்தாள். அவள் மகாலக்ஷ்மியின் தோழியோ? அவள் செவிகளில் வைரங்கள் ஜொலிக்கும் அணிகலங்கள், சிவந்த கன்னங்கள், கூரிய நாசி, அழகொழுகும் முகம். இந்த கோலத்தில் அங்கு வந்தார் மோஹினி உருவில் மகாவிஷ்ணு. பார்த்தார்கள் தேவாசுரர்கள். ஓர்க்கண்களால் பார்த்தனர், ரசித்தனர், மோகம் தலைக்கேறி அத்தனை கூட்டமும் ஆடின, பாடின, அந்த அழகு தேவதையைத் தவிர இவ்வுலகம் அனைத்தையும் அவர்கள் மறந்தே போயினர்." ஸ்ரீமத் பாகவதம்.

அந்த கூட்டம் மெளனத்தில் ஆழ்ந்தது. அனைவர் வாய்களும் பிலங்கள் போல திறந்து கிடந்தன. அப்போது அந்த அழகு தேவதை வாய் திறந்து பேசினாள். "ஓ காசிபரின் மக்களே, நீங்கள் அமைதியாக இருந்தால் நான் இப்போது உங்களுக்கு இந்த அமிர்தத்தைப் பங்கிட்டு அளிப்பேன்" என்றாள் அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியபடி. அவள் குரல் ஆயிரம் வானம்பாடியின் இனிய குரல்கள் போல இருந்தது.

"அப்படியே செய்கிறோம்" என்றனர் அனைவரும் ஒரே குரலில்.

பிறகு நடந்தது என்ன என்பதைச் சொல்லவா வேண்டும். மிகவும் சாமர்த்தியமாக அசுரர்களை தன் அழகால் மயக்கி அமிழ்தம் முழுவதையும் தேவர்களுக்குக் கொடுத்தாள். அசுரர்கள் ஏமாந்து போனார்கள். சண்டை துவங்கியது. அசுரர்கள் தோற்றார்கள். காரணம் மோஹினி கொடுத்த அமிழ்தம் அவர்களை அழியாமல் காத்தது. மறுமுறையும் மகாவிஷ்ணு தேவர்களைக் காத்து ஆட்கொண்டார். அசுரர்களைத் தனது மாயத் தோற்றத்தால் வீழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியோடு மோஹினி அவதாரத்தின் நோக்கம் முடிவடைந்துவிடவில்லை. இன்னும் இதற்கு வேலை இருக்கிறது. ஆகையால் நேரம் வரும் வரை தாருகவனத்தில் மோஹினி தங்கி இருந்தாள். தேவதாரு மரங்கள் அடங்கிய வனம் அது. ரொம்ப காலம் அங்கு தங்கினாள் பொறுமையாக.

அப்படி இருக்கும் காலத்தில் அங்கு மோஹினி யாருக்காகக் காத்திருந்தாளொ அந்த ஒரு மனிதன் வந்து சேர்ந்தான். அவன் ஒன்றும் சாதாரண மனிதன் அல்ல. மோஹினிக்கு ஏற்ற மோஹனன் அவன். நல்ல அழகு, வலுவான உடல், நல்ல லக்ஷணங்கள் பொருந்திய மனிதன். ஒரு கையில் திரிசூலமொன்றையும் மறு கையில் ஒரு கபாலத்தையும் தாங்கிக் கொண்டு வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். நின்றனர். வந்த மனிதன் வேறு யாருமல்ல, சாக்ஷாத் சிவபெருமானேதான். மிக அழகிய பிக்ஷாடனர் தோற்றத்துடன் வந்து சேர்ந்தார். 

அன்பர்களே! வழுவூர் போனீர்களானால் அங்கு ஆறடி உயரம் உள்ள அந்த பிக்ஷாடனர் விக்கிரகத்தைப் பாருங்கள், அதன் நின்ற தோற்றம், அதன் பின்னழகு, ஒரு காலை மடக்கி, மறுபுறம் திரும்பிப் பார்க்கும் நிலையில் அந்த சிற்பத்தின் அழகு, அடடா! காணக்கண் கோடி வேண்டும். என்ன அருமையான சிற்பக் கலை. நாம் பெருமைப்படத்தான் வேண்டும். 

பிக்ஷாடனரும் மோஹினியும் சந்தித்தனர். கண்ணோடு கண் இணைந்தது. இது எதேச்சையாக நடந்த நிகழ்ச்சி அல்ல. இது முன்கூட்டியே திட்டமிட்டப்பட்ட சந்திப்பாக இருந்தது. மகிஷி எனும் எருமை முக அரக்கியின் அராஜகங்களை ஒடுக்க இறைவன் திட்டமிட்ட சந்திப்பு இது. யார் இந்த மகிஷி?

மகிஷி என்ற ஓர் அரக்கி. இவளுக்கு மனித உடலும் எருமை முகமும் உண்டு. அவள் கடும் தவம் செய்து வரங்களைப் பெற்றாள். அவள் செய்த இரங்கி அவள் கேட்ட வரங்கள் கொடுக்கப்பட்டன. அது அவளுக்கு மரணம் என்று ஒரு வந்தால் அது சிவபெருமானுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த ஒரு ஆண் மகவினால்தான் கிடைக்க வேண்டும். அந்த ஆண் குழந்தையும் இப்பூவுலகில் 16 வயது சாதாரண சிறுவனாக வாழ்ந்திருக்க வேண்டும் என்பது அவள் கேட்ட வரம்.

அந்த மகிஷியை அழிக்க நேரம் வந்து விட்டது. மகாவிஷ்ணு ஒரு அழகிய மோகினியாகவும், சிவபெருமான் பிக்ஷாடனராகவும் வந்து ஒன்று சேர்ந்தனர். அவர்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. இரு கடவுளரும் அந்தக் குழந்தையை ஆசீர்வதித்தனர். தங்கள் சக்திகள் அனைத்தையும் அந்த குழந்தைக்குக் கொடுத்தனர். பிறந்த அந்த குழந்தையைக் காட்டில் விட்டுவிட்டு இருவரும் தத்தம் இருப்பிடம் சேர்ந்தனர்.

அந்த குழந்தை பந்தள ராஜனால் எடுத்து வளர்க்கப்பட்டது. குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிடப்பட்டது. அந்தச் சிறுவன் 16 ஆண்டுகள் வாழ்ந்து மகிஷியை வதம் செய்த பின் தன் இருப்பிடம் சென்றது. இது ஐயப்பனின் வரலாறு.

பிக்ஷாண்டாரும் மோஹினியும் காட்டில் சுற்றி வந்தனர். அந்த காட்டுக்கு தாருக வனம் என்று பெயர். அந்த வனம் அமைதியான இடம். இந்த தாருக வனத்தில் அனேக ரிஷிகளும் தவம் புரிவோரும் வாழ்ந்தனர். அந்த மகரிஷிகள் ஒன்றுகூடி இறைவன் இருக்கிறானா என்று விவாதித்தனர். அவர்கள் எடுத்த முடிவு, கடவுள் என்று எவரும் இல்லை தங்கள் தங்கள் கர்மாக்கள் ஒன்று சேர்ந்து வலிமை பொருந்தியதாக அமைந்து நமக்குப் பலாபலன்களைக் கொடுக்கிறது என்று நம்பினார்கள். இந்த நிலை நீடித்திருக்க சிவபெருமான் விரும்பாமல் இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார்.

பிக்ஷாடனராக வந்திருக்கும் சிவபெருமான் மோஹினியுடன் தாருகவனத்தில் ரிஷிகளிடம் பிக்ஷை கேட்டுப் புறப்பட்டார். கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை கேட்டு வருபவரை ரிஷிகள் அதிசயத்துடன் பார்த்தார்கள். குபேரன் உட்பட வையகத்தின் செல்வங்களையெல்லாம் படைத்த எம்பெருமான் கையில் பிக்ஷை பாத்திரம் ஏந்தி வந்த காட்சியை என்னென்பது? தருகவனத்தில் வசித்த ரிஷ்களின் பத்தினிமார்கள் கையில் அன்னமும் காய் கனிகளும் கொண்டு வந்து இவர்களை எதிர் கொண்டார்கள். தங்கள் கணவன்மார்கள் செய்யும் யாகங்களுக்காக எப்போதும் வேலை செய்துகொண்டிருக்கும் இவர்கள் இப்போது கையில் பிக்ஷை ஏந்தி வந்திருக்கும் பிக்ஷாடனருக்கு இட காத்திருந்தார்கள். ரிஷிகள் தலையசைத்து சம்மதம் தெரிவிக்க இவர்கள் பிக்ஷையிட தயாராக இருந்தார்கள். பிக்ஷாடனரைக் கண்ட ரிஷி பத்தினிகள் அவருடைய தேஜசைப் பார்த்து அதிசயித்து நின்றார்கள். இது என்ன விந்தை. பிக்ஷாடனரின் பின்னால் அந்த ரிஷி பத்தினிகள் தங்களை மறந்து செல்லத் தொடங்கினார்கள்.

இங்கு இந்தவிதமாக பிக்ஷாடனரைப் பின்பற்றி ரிஷி பத்தினிகள் சென்று கொண்டிருக்க, அங்கு ரிஷிகள் யாகம் செய்துகொண்டிருந்த யாகசாலைக்குச் சென்றாள் மோஹினி. அங்கு சென்ற மோஹினி தன் இனிய குரலெடுத்துப் பாடினாள். அதற்கேற்ப ஆடத் தொடங்கினாள். ரிஷிகளின் கவனம் யாகத்திலிருந்து இப்போது மோஹினியின்பால் திரும்பியது. அதே நேரம் பிக்ஷாடனரும் அவரைப் பிந்தொடர்ந்த பத்தினிகளும் யாகசாலையைக் கடந்து சென்றனர். அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்த ரிஷிகளுக்கு அதிர்ச்சி. இது என்ன பிக்ஷையெடுத்துக் கொண்டு ஒருவர் செல்ல, அவர் பின்னால் பத்தினிகள் அணிவகுத்து செல்வது ஏன்? திகைத்தனர். பேச்சு நீங்கினர். வாய் பிளந்தனர். இவர்களுக்கெல்லாம் என்ன ஆயிற்று. ஏன் இவர்கள் இப்படி அந்த பிக்ஷாடனர் பின் செல்கின்றனர்? கொபம் தலைக்கேறியது ரிஷிகளுக்கு. முன்னால் சென்று கொண்டிருந்த பிக்ஷாடனரை கூவி அழைத்தனர். "ஓய்! பிக்ஷை ஏற்க உமக்கு இந்த வனாந்தரம்தான் கிடைத்ததா? இங்கு யார் இருக்கிறார்கள் உமக்கு பிக்ஷையிட. நாங்கள் செய்துகொண்டிருக்கும் யாகத்துக்கு இடையூறு செய்கிறீரே!" என்றனர்.

இதனைக் கேட்டுக்கொண்டு பிக்ஷாடனர் மோஹினியின் அருகில் சென்றார். ரிஷிகளைப் பார்த்து சொன்னார், "ஓ! சிறந்த ரிஷிகளே! நீங்கள் யாகம் புரிவதைப் போலவே நானும் தனித்திருந்து யோகம் செய்ய இந்த இடம் நாடி வந்தேன். என் மனைவியுடன் அமைதியான இடம் நாடி வந்த இடத்தில் பிக்ஷை எடுத்தோம், என்ன தவறு?" என்றார்.

ரிஷிகளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி. அப்போதுதான் அங்கு வன்த ஒரு மோஹினியின் பால் ஈர்ப்பு கொண்டு அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவள்தான் அந்த பிக்ஷாடனரின் மனைவி என்பது தெரிந்து அதிர்ந்தனர். 

பிக்ஷாடனரைப் பார்த்து கேட்டார்கள், " ஐயா! இவள் உன் மனைவியா? முற்றும் துறந்தவர்களான எம்மைப் போன்ற ரிஷிகளின் முன்பு அவள் நடந்துகொண்டதைப் பார்த்தாயா? ஆடுகிறாள், பாடுகிறாள், எங்கள் மனங்களைக் கெடுக்கிறாள். அவள் உம் மனைவியானால் அவள் கற்பு நிலை என்னவாயிற்று? ஏன் அவள் இப்படி நடந்து கொள்கிறாள்? என்றனர்.

பிக்ஷாடனர் மனம்விட்டுச் சிரித்தார். அந்த வனமே அவர் சிரிப்பை எதிரொலித்தது. 

"யாரது இப்படி பேசுவது? ஒரு பெண் வந்து பாடுகிறாள், ஆடுகிறாள் என்பதற்காக நீங்கள் செய்து கொண்டிருக்கும் புனிதமான யாகத்தை மறந்துவிட்டு அவள் பின்னால் வந்து ரசித்துக் கொண்டு நிற்கிறீர்களே. உங்கள் தவம் என்ன ஆயிற்று.? இதுதானா உங்கள் தவம்" என்று கேலி செய்தார்.

"என் மனைவி என் பின்னாலேயே உறுதியாக நிற்கிறாள். உங்கள் மனைவிமார்கள் என் பின்னால் வரிசையாக மோகித்து வந்து கொண்டிருக்கிறார்கள். இதில் யாருடைய கற்பு நிலைபற்றி கவலைப் படுகிறீர்கள்." என்றார். அவ்வளவுதான் ரிஷிகள் வாயடைத்து போய்விட்டார்கள். புதிய மனிதன் சொல்வது சரிதான். தங்கள் மனைவிமார்கள் அவர் பின்னால் ஓடுகிறார்கள், நாம் அவர் மனைவியைக் குறைகூறப் போனோமே என்று வெட்கினார்கள்.

பிக்ஷாடனரும், மோகினியும் பின்னர் அங்கு இருந்த வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றனர். வசிஷ்டர் அவர்களை மனமுவந்து பணிந்து வரவேற்றார். வசிஷ்டரும் அவர் மனைவியும் பாய் விரித்து இவர்களை அமரச் செய்து, உணவு பரிமாறி உபசரித்தனர். உணவுக்குப் பிறகு இருவருக்கும் தாம்பூலம் கொடுத்து, சந்தனம் தடவி மரியாதை செய்தனர். மகேஸ்வரனும், மகாவிஷ்ணுவும் பிக்ஷாடனராகவும் மோகினியாகவும் வந்திருந்த நிலையில் அவர்களுடைய உபசரிப்பில் மனமகிழ்ந்து அவர்களை ஆசீர்வதித்துவிட்டு அவரவர் கைலாய மலைக்கும், வைகுண்டத்திற்கும் திரும்பச் சென்றனர்.

அவர்கள் அங்கிருந்து போனபின்பு தாருகவனத்து ரிஷிகள் அவமானப்பட்டு முகம் கருத்து நின்றனர். தங்கள் மனைவிமார் நடந்து கொண்ட முறையில் மனம் கலங்கியிருந்தனர். அந்த குழப்பத்திலும் கோபத்திலும் அவர்கள் மனதில் உதித்தது ஓர் எண்ணம். இதற்கெல்லாம் காரணமான அந்த மனிதனைக் கொன்றால் என்ன என்பதுதான் அது. ரிஷிகள் ஒருமனதாக இந்தத் தீர்மானத்துக்கு சம்மதம் தெரிவித்தார்கள். இப்படிப் பட்ட கொலைபாதகச் செயலைச் செய்ய அவர்கள் "அபிச்சார ஹோமம்" எனும் அநாசார ஹோமத்தைச் செய்யத் தொடங்கினார்கள். 

எரியும் ஹோமகுண்டத்தில் காரமான மிளகாய்களை வார்த்தார்கள். மற்ற ஹோம திரவியங்களை இட்டார்கள். ஹோமகுண்டத்திலிருந்து கருத்த புகையும், நெருப்பும் வெளிக்கிளம்பியது. எங்கும் ஒரே மிளகாயின் கார நெடி. ரிஷிகள் கண்களை மூடி மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டிருந்தனர். நல்ல வேத மந்திரங்களைப் போல் இல்லாமல் இந்த தீய மந்திரங்களின் உச்சரிப்பு வித்தியாசமாக ஒலித்தது.

அப்போது ஹோமகுண்டத்தில் எரிந்து கொண்டிருந்த தீயிலிருந்து ஒரு பெரிய சர்ப்பம் 'உஸ்ஸ்" என்று சப்தம் செய்துகொண்டு விஷத்தைக் கக்கிக் கொண்டு எழுந்தது. அப்படி எழுந்த அந்த சர்ப்பம் நேரே சென்று சிவனுடைய கழுத்தை குறிவைத்துப் பறந்து சென்றது. ஆலகால விஷத்தைத் தன் கரங்களில் எடுத்து விழுங்கிய அந்த நீலகண்டனின் கழுத்தை நோக்கி இந்த பாம்பு அம்புபோலச் சென்றது. தன் கழுத்தைக் குறிவைத்து வரும் அந்த விஷ ஜந்துவைத் தன் இரு விரல்களால் பிடித்து அதைத் தன் இடையில் கச்சு போல அணிந்து கொண்டார். 

கோபம் கொண்ட ரிஷிகள் மறுபடி ஒரு புலியை உருவாக்கி அதனை சிவன் மீது ஏவினர். அதை எதிர்பார்த்திருந்த சிவபெருமான் அதை ஒரு விரலால் அடித்துக் கொன்று அதன் தோலைத் தன் இடையில் அணிந்து கொண்டார்.

தொடர்ந்து சளைக்காமல் ரிஷிகள் கோபாக்கினி ஜுவாலையையும், காதைக் கிழிக்கும் சப்தத்தை எழுப்பும் டமருகத்தையும் அவர் மீது ஏவினர். அவற்றை மெல்லத் தன் கரங்களில் வாங்கி அமைதியாக வைத்துக் கொண்டார். சிவபெருமானின் இடக்கரத்தில் மஞ்சள் நிற ஜுவாலையுடன் அந்தத் தீக்கதிர் அமர்ந்துவிட, டமருகம் 'ஓம்' 'ஓம்' என ஒலியெழுப்பிக் கொண்டு வலது கரத்தில் அமர்ந்தது.

ஹோமகுண்டத்தில் எழுந்த விஷ தேனீ ஒலி எழுப்பி சிவனது நடனத்து இசைக்கு ஸ்ருதி சேர்த்தது. உலகில் நிலவும் அத்தனை நோய்களும் 'முயலகன்' எனும் குள்ள தீய உருவத்தில் சிவபெருமான் நடனமாட மேடை அமைத்துக் கொடுத்து காலடியில் வீழ்ந்தது.

சிவபெருமான் ரிஷிகளைப் பார்த்து முறுவல் செய்தார். கண்களில் கேலிச் சிரிப்பு தெரிந்தது. அவ்வளவுதான் தாங்கள் நசுக்கப்பட்டதாக உணர்ந்த ரிஷிகளின் கோபம் கட்டுக்கடங்காமல் வெளிப்பட்டது. உடனே ஏராளமான ஹோம திரவியங்களைத் தீயிலிட்டு தீய மந்திரங்களை உரக்கக் கூவினர். அப்போது அந்த ஹோம குண்டத்தீயிலிருந்து தீமைகள் யாவையும் உள்ளடக்கிய ஒரு கன்னங்கரிய மதயானை படீலென்று வெடித்துச் சிதறி வெளிப்பட்டது. யானையின் கண்களில் கோபாக்கினி சுடர்விட்டது. அது வாலை சுழற்ற கானகத்து மரங்களெல்லாம் சடசடவென்று வீழ்ந்தது. காலால் பூமியை உதைக்க அங்கு புழுதிப் படலம் புறப்பட்டது. 

அந்த கரிய மதயானையை ஏவிவிட்டனர் ரிஷிகள் தன்னை எதிர்க்க வந்திருக்கும் புதியவரை. யானை பூமி அதிர ஓடி வந்து பிளிறிக்கொண்டு வாயைத் திறந்து துதிக்கையை தூக்கிக்கொண்டு அந்த புதியவரை விழுங்க ஓடிவந்தது. . சற்றும் கலக்கமின்றி அவர் அது தன்னை நெருங்குமுன்பாக அந்தப் புதியவர் மிகச் சிறு ஈ அளவுக்கு உடலைச் சுருக்கிக்கொண்டு அதன் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார். அவ்வளவில் இந்த உலகம் இருண்டது. எங்கும் ஒரே மை இருட்டு.

உலகத்தில் இயக்கங்கள் நின்றன. காற்று வீசுவது நின்றது. கடல் அலைகள் வீசுவது நின்றது. பறவைகள் பறப்பது நின்றது. உலகத்து ஜீவராசிகள் அனைத்தும் செய்வதறியாது திகைத்து அதது நின்ற இடத்தில் நின்றது. தேவலோகத்தில் தேவர்கள் பயந்து ஓடிவரத் தொடங்கினர். தாருகவனத்து ரிஷிகள் மட்டும் புதியவன் மாண்டுபோனான் என்று மகிழ்ந்து ஆடிப்பாடி குதித்தனர். 

அங்கு அன்னை பார்வதி மகேஸ்வரி தன் குழந்தைகள் விநாயகர், நான்முகன் ஆகியோருடன் விளையாடிக் கொண்டிருந்தவர் இந்த மாற்றங்களைக் கண்டு திகைத்தார். எதையோ விழுங்கிவிட்டு உலகில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதிர்ந்த யானையும் செய்வதறியாது திகைத்து நின்றது.

ஒரு சில விநாடிகள்தான் அப்படி. அடுத்த விநாடி அந்த யானையின் போக்கு விசித்திரமாக இருந்தது. அது ஏதோ பிரசவ வலியால் துடிப்பதைப் போல துவண்டது, குதித்தது, ஆடியது, மண்ணைப் பிராண்டியது. துதிக்கையை உயர்த்தி உரத்த குரலில் பிளிறியது. அது மகிழ்ச்சி ஆரவாரமல்ல. வலியின், துன்பத்தின், மரண ஓலம். 

திடீரென்று யானை கீழே விழுந்தது. பிளிறியது. மனத்தில் சென்று மோதிக்கொண்டது. உடலெங்கும் எரிகிறதோ, ஓடிப்போய் நீர்நிலைகளில் விழுந்து புரண்டது. அங்கிருந்த பெரிய குளத்துள் குதித்து உடல் முழுவதையும் மூழ்கி குளிரவைக்க முனைந்தது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி Empty Re: ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தி

Post by ராகவா Mon 16 Sep 2013 - 19:08

அதற்கெல்லாம் குணப்படக்கூடிய வஸ்துவா உடலுக்குள் போயிருக்கிறது. அந்த மூட யானைக்குத் தெரியவா போகிறது?

யானை நீருக்குள் முழுவதும் மூழ்கியது. அப்போது உலகை அதிரவைக்கும் ஒரு பெரிய வெடிச்சத்தம். குளத்தின் நீர் வெடித்துச் சிதறி நாலாபுறமும் பாய்ந்து அடித்தது. அங்கு அப்போது ஒரு விநாடி அமைதியில் நீர்நிலை சமனமாக அதிலிருந்து வெளிக்கிளம்பியது ஒரு ஒளிப்பிழம்பு. நன்றாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு அதுவரை பரவியிருந்த இருளைக் கிழித்துக் கொண்டு வெளிவரும் இந்த ஒளிப்பிழம்பு யார், என்ன? ஆம், கைலைநாதனான சிவபெருமாந்தான் அந்த யானையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிவந்திருப்பவர். 

அப்போது அவரைக் காண கண்கள் கூசுகின்றன. ஒளிமயமான உருவம். ஆறு கரங்கள், அவைகளில் விதவிதமான ஆயுதங்கள், இரண்டு கரங்கள் யானையின் கிழிக்கப்பட்ட உடலை இருபுறமும் விலக்கிக் கொண்டு வெளிக் கிளம்பிய காட்சி. ஒரு காலடியில் யானையின் தலை மாட்டிக் கொண்டிருக்க, மற்றோரு காலைத் தூக்கிக்கொண்டு, கண்கள் தீக்கனலைக் கக்க, தலையில் சிகைக் கற்றை கொத்து கொத்தாக புன்னை மலர்களின் கொத்து போல அசைய அங்கு பொன்னிறத்தில் கஜசம்ஹாரமூர்த்தி வெளிப்பட்டார். அடடா! கண்படைத்த பாக்கியம் இந்தக் காட்சியைப் பார்ப்பவர்கள் பெறுவார்கள். அன்று மட்டுமல்ல, இன்றும் இந்தத் திருவிழா நடக்கும் நாட்களில் சிவபெருமான் கஜசம்ஹாரமூர்த்தியாகத் தோன்றும் காட்சி அரிய காட்சி.

அப்போதுதான் உலகம் இருண்டுவிட்டதைக் கண்டு தன்னிரு குழந்தைகளில் விநாயகரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு பால முருகனைத் தன் இடுப்பில் சுமந்துகொண்டு பரமேஸ்வரி அங்கு வந்து சேரவும், அந்தக் குளத்திலிருந்து கஜசம்ஹாரமூர்த்தி எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. உலகம் வெளிச்சம் பரவத் தொடங்கியதும், அங்கு தந்தையை முதன்முதலில் பார்த்த குழந்தை முருகன், "அதோ! அப்பா! என்று அன்னையின் இடுப்பில் இருந்த குழந்தை தன் பிஞ்சு விரலைக் காட்டி அன்னைக்குச் சொல்கிறது". அதி அற்புதக் காட்சி, அதி அற்புத சிற்பம். வழுவூர் செய்த பாக்கியம், அவ்வூர் மக்கள் செய்த பாக்கியம்.

தாருகவனத்து முனிவர்கள் செய்த தவறால் பாதிக்கப்பட்டிருந்த யாகங்களுக்கு உரிய வேதபுருஷன் ஒரு மான் வடிவம் தாங்கி சிவபெருமானின் காலடியில் வந்து பணிந்தார். தன்னை வைத்து இந்த யாகம் செய்து பாபம் இழைத்த அந்த ரிஷிகளுக்காக வருந்தி மன்னிப்புக் கோரினார் வேதபுருஷன். சிவன் அந்த மானைத் தன் இடக்கையால் பிடித்துக் கொண்டு வேதங்களை எப்போதும் தன் செவிகளில் ஓதிக்கொண்டிருக்கும்படி பணித்தார்.

தங்கள் யாகத்தாலும் செய்த பாவங்களாலும் தாருகவனத்து முனிவர்கள் வருந்தினர். சிவ விஷ்ணுவுக்குச் செய்த அபகீர்த்தி செயல்களுக்கான பலன்களை அனுபவித்தனர். இறுதியில் தாங்கள் கொண்டு கொள்கைகள் எவ்வளவு தவறானது, இறைவன் ஒருவனே பரம்பொருள் என்பதை உணர்ந்து கொண்டனர். சிவபெருமானின் காலடியில் சென்று விழுந்து தங்கள் அறியாமைக்காக வருந்தி வேண்டினர். கோபத்துக்குச் சென்ற வேகத்தில் சிவபெருமான் அமைதி அடைந்து அவர்களை ஆட்கொண்டு அருளினார். 

கைலைநாதனின் இந்தத் திருவிளையாடலைத்தான் அன்னை பராசக்தியின் திருவிளையாடலாக குமரகுருபர சுவாமிகள் கரியின் தோல் போர்த்தியவளாக பாரவதியைப் போற்றுகிறார். 

சிவன் எனும் மகா ஒளியின் முன் மற்ற எவ்வகை ஒளியும் விளங்கா என்பதை திருமூலர் திருமந்திரத்தில் ஒரு பாட்டில் விளக்குகிறார். அது

"முத்தீக் கொளுவி முழங்கு எரி வேள்வியுள்
அத்தி உரி அரன் ஆவது அறிகிலர்
சத்தி கருதியது ஆம் பல தேவரும்
அத்தீயினுள் எழுந்தன்று கொலையே."

மூன்று வகையான தீயினை எழுப்பி, நாதத்தை வெளிப்படுத்துகின்ற அக்கினியின் செயலுள், யானை போன்ற கரிய இருளைக் கிழித்துக்கொண்டு வெளிப்படும் ஒளி இறைவனாக ஆதலை யாரும் அறியவில்லை. குறி, குணம் கூடிய பல தேவர்களும் அந்தத் தீயின் கண் வெளிப்பட்டபோது மறைந்தனர் என்பது இதன் பொருள்.

யாகத்தில் அக்னி வளர்த்து வேள்வி செய்வது போல அகத்தே உள்ள அக்னியைத் தலையின் மீது வளர்த்துச் செய்வது அக்னி காரியம். இங்கு முத்தீ என்பதை பெரியோர்கள் காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினியம் என்பர். இப்படி அந்த முத்தீயிலிருந்து எழுந்த சிவன் முன் அனைத்தும் அழிந்தது என்பதை விளக்கும் கயமுகாசுர சம்ஹாரக் கொள்கை விளக்குகிறது என்கிறார் திருமூலர். இது நிகழ்ந்த இடம் வழுவூர் என்கிறது புராணங்கள்.
நன்றி:பாரதிபயிலகம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum