சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

பொன்னியின் செல்வன் பாகம் 01  - Page 4 Khan11

பொன்னியின் செல்வன் பாகம் 01

+2
*சம்ஸ்
Nisha
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

பொன்னியின் செல்வன் பாகம் 01  - Page 4 Empty பொன்னியின் செல்வன் பாகம் 01

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Oct 2015 - 19:05

First topic message reminder :

முதல் பாகம் – புது வெள்ளம்

அத்தியாயம் 1- ஆடித்திருநாள்!
அத்தியாயம் 2- ஆழ்வார்க்கடியான் நம்பி!
அத்தியாயம் 3- விண்ணகரக்கோயில்!
அத்தியாயம் 4- கடம்பூர் மாளிகை!
அத்தியாயம் 5- குரவைக்க்கூத்து!
அத்தியாயம் 6- நடுநிசிக்கூட்டம்!
அத்தியாயம் 7- சிரிப்பும் கொதிப்பும்!
அத்தியாயம் 8 - பல்லக்கில் யார்?
அத்தியாயம் 9- வழி நடைப்பேச்சு!

அத்தியாயம் 10- குடந்தை ஜோதிடர்

அத்தியாயம் 11- திடும் பிரவேசம்

அத்தியாயம் 12 – நந்தினி
அத்தியாயம் 13 – வளர்பிறைச் சந்திரன்
அத்தியாயம் 14 – ஆற்றங்கரை முதலை
அத்தியாயம் 15 – வானதியின் ஜாலம்
அத்தியாயம் 16 – அருள்மொழிவர்மர்
அத்தியாயம் 17 – குதிரை பாய்ந்தது!
அத்தியாயம் 18 – இடும்பன்காரி
அத்தியாயம் 19 – ரணகள அரண்யம்
அத்தியாயம் 20 – “முதற் பகைவன்!”
அத்தியாயம் 21 – திரை சலசலத்தது!
அத்தியாயம் 22 – வேளக்காரப் படை
அத்தியாயம் 23 – அமுதனின் அன்னை
அத்தியாயம் 24 – காக்கையும் குயிலும்
அத்தியாயம் 25 – கோட்டைக்குள்ளே

அத்தியாயம் 26 – “அபாயம்! அபாயம்!”
அத்தியாயம் 27 – ஆஸ்தான புலவர்கள்
அத்தியாயம் 28 – இரும்புப் பிடி
அத்தியாயம் 29 – “நம் விருந்தாளி”
அத்தியாயம் 30 – சித்திர மண்டபம்
அத்தியாயம் 31 – “திருடர்! திருடர்!”
அத்தியாயம் 32 – பரிசோதனை
அத்தியாயம் 33 – மரத்தில் ஒரு மங்கை!
அத்தியாயம் 34 – லதா மண்டபம்
அத்தியாயம் 35 – மந்திரவாதி
அத்தியாயம் 36 – “ஞாபகம் இருக்கிறதா?”
அத்தியாயம் 37 – சிம்மங்கள் மோதின!
அத்தியாயம் 38 – நந்தினியின் ஊடல்
அத்தியாயம் 39 – உலகம் சுழன்றது!
அத்தியாயம் 40 – இருள் மாளிகை

அத்தியாயம் 41 – நிலவறை
அத்தியாயம் 42 – நட்புக்கு அழகா?
அத்தியாயம் 43 – பழையாறை

அத்தியாயம் 44 – எல்லாம் அவள் வேலை!
அத்தியாயம் 45 – குற்றம் செய்த ஒற்றன்
அத்தியாயம் 46 – மக்களின் முணுமுணுப்பு
அத்தியாயம் 47 – ஈசான சிவபட்டர்
அத்தியாயம் 48 – நீர்ச் சுழலும் விழிச் சுழலும்

அத்தியாயம் 49 – விந்தையிலும் விந்தை!
அத்தியாயம் 50 – பராந்தகர் ஆதுரசாலை
அத்தியாயம் 51 – மாமல்லபுரம்
அத்தியாயம் 52 – கிழவன் கல்யாணம்
அத்தியாயம் 53 – மலையமான் ஆவேசம்
அத்தியாயம் 54 – “நஞ்சினும் கொடியாள்”
அத்தியாயம் 55 – நந்தினியின் காதலன்
அத்தியாயம் 56 – அந்தப்புரசம்பவம்

அத்தியாயம் 57 – மாய மோகினி

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


பொன்னியின் செல்வன் பாகம் 01  - Page 4 Empty Re: பொன்னியின் செல்வன் பாகம் 01

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Nov 2015 - 6:56

அத்தியாயம் 56 – அந்தப்புரசம்பவம்
-----------
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் காஞ்சியில் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி அரசு புரிந்த காலத்தில் நாடெங்கும் மகா பாரதக் கதையைப் படிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். பௌத்த சமண மதங்களின் பிரசாரத்தினால் மக்கள் சாதுக்களாகப் போயிருந்த தமிழ்நாட்டில் மீண்டும் வீர உணர்ச்சி தளிர்த்துப் பரவ வேண்டும் என்பதற்காக அந்த ஏற்பாடு செய்தார். பாரதக் கதை படிப்பதற்கென்றே பல ஊர்களில் பாரத மண்டபங்கள் கட்டினார். அவர் தொடங்கிய ஏற்பாடு இன்னமும் தொண்டை மண்டலத்தில் தடைப்படாமல் நடந்து வந்தது. இரவில் மக்கள் மண்டபங்களிலோ திறந்த வெளியிலோ கூடி பாரதக் கதை கேட்டார்கள். பாரதப் பெருங் கதையையும் பாரதத்திலுள்ள கிளைக் கதைகளையும் பாட்டிலும் பண்ணிலும் வசனத்திலும் அமைத்து வீராவேசத்துடன் சொல்லக் கூடிய பாடினிகள் பலர் தோன்றினார்கள்.

அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றிருந்தபோது மணிபுரியை அடுத்த வனத்தில் மணிபுரி ராஜகுமாரியான சித்ராங்கியைக் கண்டான். இருவரும் காதல் கொண்டார்கள். சித்ராங்கிக்கு அரவான் என்னும் அருமைப் புதல்வன் பிறந்தான். மலைநாட்டுக் கோமகளுக்கு அர்ச்சுனனால் பிறந்த மகனாதலால் அரவான் மகா வீரனாயிருந்தான். பாரத யுத்தம் நடக்கப் போகிறது என்று அறிந்து அவனும் பாண்டவர் படையில் சேர வந்து சேர்ந்தான். போர் தொடங்குவதற்கு முன்னால் சகல இலட்சணங்களும் பொருந்திய மகா வீரனான இளைஞன் ஒருவனைக் களபலி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு வந்த போது, “இதோ நான் இருக்கிறேன்; என்னைக் களபலியாகக் கொடுங்கள்!” என்று அரவான் முன் வந்தான். அவனைக் காட்டிலும் சிறந்த வீரன் யாரும் பாண்டவர் பக்கத்தில் இல்லாதபடியால், தானாக முன் வந்த அரவானையே பலி கொடுக்க வேண்டியதாயிற்று.

தன்னுடைய கட்சியின் வெற்றிக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த வீர அரவானின் கதை தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. துரோபதை அம்மனுக்குக் கோயில் கட்டிய இடங்களிலெல்லாம் பக்கத்தில் அரவானுக்கும் கோயில் கட்டி திருவிழா நடத்தினார்கள்.

மாமல்லபுரத்து ஐந்து ரதங்களின் அருகில் அன்றிரவு நடந்த அரவான் கதை முடிவடைந்து விட்டதாகத் தோன்றியது. “மூன்று உலகமும் உடைய சுந்தர சோழ சக்கரவர்த்தி வாழ்க!” “கோப்பரகேசரி ஆதித்த கரிகாலர் வாழ்க!” என்று பல குரல்களில் எழுந்த கோஷங்கள் காற்றிலே மிதந்து வந்தன. கதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எழுந்து கலையத் தொடங்கினார்கள்.

“கதை முடிந்து விட்டது. மலையமான் சிறிது நேரத்தில் திரும்பி வந்து விடுவார்” என்றான் கரிகாலன்.

“அரவான் கதை முடிந்தது; ஆனால் தாங்கள் சொல்லி வந்த கதை இன்னும் முடியவில்லையே?” என்றான் பார்த்திபன்.

“இந்தப் பிராயத்தில் மலையமானின் மனோதிடத்தைப் பார்! இன்னமும் நடுநிசி வரையில் கண் விழித்துக் கதை கேட்கப் போகிறார் பார்!” என்றான் கரிகாலன்.

“தொண்டு கிழமாகிற வரையில் உயிரோடிருப்பது அவ்வளவு அதிசயமான காரியமா! ஊரில் எத்தனையோ கிழவர்கள் இருக்கிறார்கள். இரவில் தூக்கம் பிடியாமல் கதை கேட்கப் போகிறார்கள்….”

“திருக்கோவலூர் மிலாடுடையாரை அப்படிச் சாதாரணக் கிழவர்களோடு சேர்த்து விடுகிறாயா? எத்தனை போர்க்களங்களைப் பார்த்தவர் அவர்? மலையமானின் வயதில் நாம் உயிரோடிருப்போமா என்பதே சந்தேகம். இருந்தாலும், அவரைப் போல் திடமாயிருக்க மாட்டோம்.”

“அரசே! பழைய காலத்து மனிதர்கள் திடமாயிருப்பதற்குக் காரணம் இருக்கிறது…”

“அது என்ன காரணம்?”

“அவர்கள் பெண்களின் மோகவலையில் சிக்குவதில்லை. கேவலம் ஓர் அர்ச்சகரின் மகளிடம் மனத்தைப் பறி கொடுத்துவிட்டு அவளை நினைத்து உருகிக் கொண்டிருப்பதில்லை. அப்படி எந்தப் பெண்ணிடமாவது மனம் சென்றால் அவள் கூந்தலைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்து அந்தப்புரத்தில் சேர்த்து விட்டு, வேறு வேலையைப் பார்ப்பார்கள்!…”

“பார்த்திபா! நந்தினி உண்மையில் அர்ச்சகர் வீட்டுப் பெண் அல்ல; அவளுடைய பிறப்பைக் குறித்து ஏதோ ஓர் இரகசியம் இருக்க வேண்டும்!…”

“நந்தினி யாருடைய மகளாயிருந்தால் என்ன? அர்ச்சகர் மகளாயிருந்தால் என்ன? அரசர் மகளாயிருந்தால் என்ன? அல்லது அனாதைப் பெண்ணாயிருந்தால் தான் என்ன? அந்த இன்னொரு கிழவர் பெரிய பழுவேட்டரையரைப் பாருங்கள்! எங்கேயோ வழியில் அவளைப் பார்த்தார்; உடனே இழுத்துக் கொண்டு வந்து எட்டோடு ஒன்பது என்று அந்தப்புரத்தில் அடைத்தார்…”

“நண்ப! அதை நினைத்தால் எனக்கு அதிசயமாகத்தான் இருக்கிறது!…”

“எதை நினைத்தால்? அந்தக் கிழவர் எப்படி இவளுடைய வலையில் சிக்கினார் என்பதைத்தானே?”

“இல்லை, இல்லை! ஒரு காலத்தில் என்னைக் காதலித்ததாகச் சொன்னவள், பிறகு வீரபாண்டியனைக் காதலித்து அவன் உயிரைக் காப்பாற்ற முயன்றவள், இந்தத் தொண்டு கிழவரை மணந்து கொள்ள எவ்வாறு சம்மதித்தாள்? அதை நினைத்தால்தான் அதிசயமாயிருக்கிறது.”

“எனக்கு அது ஒன்றும் அதிசயமாகத் தோன்றவில்லை, ஐயா! தங்களுடைய செயலை நினைத்தால்தான் அதிசயமாயிருக்கிறது! சோழ குலத்தின் பரம வைரியான பாண்டியன், – தோல்வியடைந்ததும் ஓடி ஒளியும் கோழையினும் கோழையானாலும் ‘வீரபாண்டியன்’ என்று பெயர் சூட்டிக் கொண்டவன், – அவனுக்கு அடைக்கலம் கொடுத்து உயிர்ப்பிச்சை கேட்டவளைத் தாங்கள் சும்மா விட்டுவிட்டு வந்தீர்களே? அதை எண்ணினால்தான் அதிசயத்திலும் அதிசயமாயிருக்கிறது. ஒன்று அவளையும் அங்கேயே கத்தியால் வெட்டிப் போட்டிருக்க வேண்டும்; அதற்கு விருப்பமில்லாவிட்டால் காலையும் கையையும் சேர்த்துக் கட்டிச் சிறைப்படுத்தி வந்திருக்க வேண்டும்! இந்த இரண்டில் ஒன்று செய்யாமல் சும்மா விட்டு விட்டு வந்தீர்களே!… 

இப்போது எனக்குக் கூட ஞாபகம் வருகிறது, அரசே! அந்தக் குடிசையின் வாசலில் தாங்கள் வீரபாண்டியன் உடலைத் தூக்கிக் கொண்டு வந்து போட்டீர்கள். நாங்கள் அனைவரும் வெறிகொண்டவர்களைப் போல் வெற்றி முழக்கம் செய்தோம். அதற்கு நடுவில் குடிசைக்குள்ளேயிருந்து விம்மல் சத்தம் ஒன்று வந்தது. ‘அது யார்?’ என்று நான் கேட்டேன். ‘யாரோ அர்ச்சகர் குடும்பத்துப் பெண்கள். ஏற்கெனவே அவர்கள் பீதியடைந்து கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். நீங்கள் யாரும் உள்ளே போக வேண்டாம்!” என்றீர்கள். வெற்றி வெறியில் இருந்த நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. உடனே எல்லோருமாக வீரபாண்டியனுடைய தலையை எடுத்துக் கொண்டு கிளம்பினோம், தாங்களும் எங்களுடன் வந்தீர்கள். 

ஆனால் எங்கள் களிப்பிலும் கொண்டாட்டத்திலும் அவ்வளவாகத் தாங்கள் கலந்து கொள்ளவில்லை. உற்சாகம் குன்றிக் காணப்பட்டீர்கள். நான் காரணம் கேட்டேன். தாங்கள் ஏதோ சமாதானம் சொன்னீர்கள். தங்களுக்கு ஏதேனும் பலமான காயம் பட்டிருக்குமோ என்று நான் சந்தேகித்துக் கேட்டது கூட எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது!” என்றான் பார்த்திபேந்திரன்.

“என் உடம்பில் ஒன்றும் காயம் படவில்லை, பார்த்திபா! உள்ளத்தில் என்றும் ஆறாத காயம் பட்டு விட்டது.வீரபாண்டியன் படுத்துக் கிடந்த கட்டிலுக்கு முன்னால் வந்து அவள் கைகூப்பி என்னிடம் உயிர்ப் பிச்சை கேட்ட காட்சி என் மனத்தை விட்டு அகலவில்லை. ‘ஐயோ! அவள் கேட்டதைக் கொடுக்காமல் போய் விட்டோமே! என்று என் மனம் பதைபதைத்தது. என் உயிரைக் கொடுப்பதின் மூலம் வீரபாண்டியனை உயிர்ப்பித்து அவளிடம் சேர்க்க முடியுமானால் அப்படியே நான் செய்திருப்பேன். இது முடியாதபடியால் என்னை நானே நொந்து கொண்டேன். பார்த்திபா! நம்முடைய வல்லமைகளைப் பற்றி நாம் எவ்வளவோ நினைத்துக் கொள்கிறோம். நம்மால் ஆகாத காரியம் ஒன்றுமேயில்லை என்று கருதி இறுமாப்பு அடைகிறோம்.

 ‘அரசர்களிடம் மகா விஷ்ணுவின் அம்சம் இருக்கிறது’ என்று ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்திருப்பதைக் கேட்டு விட்டு, அதைக் கூட உண்மையென்று நம்பி விடுகிறோம். ஆனால், உடலை விட்டுப் பிரிந்து போன ஆவியைத் திரும்பக் கொண்டு வரும் வல்லமை நமக்கு உண்டா? அரச குலத்தில் பிறந்த யாருக்காவது இருந்திருக்கிறதா? நம்மால் உயிரை வாங்கத்தான் முடியும்; ஆனால் உயிரைக் கொடுக்கும் சக்தி மனிதர்களாய்ப் பிறந்த யாருக்கும் இல்லை!…”

“அப்படி இல்லாமலிருப்பதே மிக நல்லது. அந்த வல்லமை தங்களுக்கு இருந்திருந்தால், எவ்வளவு தவறான காரியம் நடந்து போயிருக்கும்? பாண்டியனுக்கு மறுபடியும் உயிரைக் கொடுத்திருப்பீர்கள். அவன் மீண்டும் எங்கேயாவது மலைப் பொந்தில் போய் ஒளிந்திருப்பான். பாண்டிய நாட்டு யுத்தம் ஒருவேளை இன்னும் நடந்து கொண்டிருக்கும்! இவ்வளவும் ஒரு பெண்ணின் பொய்க் கண்ணீருக்காக!” என்றான் பார்த்திபேந்திரன்.

“பல்லவா! நீ பெண் குலத்தை வெறுக்கும் துர்ப்பாக்கியசாலி! காதல் என்றால் இன்னதென்று நீ அறிய மாட்டாய்! அதனாலேயே இவ்விதம் பேசுகிறாய்!”

“ஆம்; நான் எந்தப் பெண்ணுடைய கண் வலையிலும் சிக்கியதில்லைதான். ஆனால் தங்கள் அந்தரங்கத்துக்குரிய நண்பன் வந்தியத்தேவன் மஞ்சள் பூசிய முகம் எதைக் கண்டாலும் மயங்கிப் பல்லை இளிப்பவன். ஆகையினாலேயே அவனைத் தங்களுக்கு என்னைக் காட்டிலும் பிடித்திருக்கிறது. இல்லையா, அரசே!”

“ஆகா! கடைசியில் வந்தியத்தேவனிடம் வந்து விட்டாய் அல்லவா? ஏது, இத்தனை நேரம் அவனை மறந்து விட்டாயே என்று பார்த்தேன்!”

“ஆம், அவனைப் பற்றி உண்மையைச் சொன்னால் தங்களுக்குக் கசப்பாகவே இருக்கும். அந்தப் பேச்சை விட்டு விடுகிறேன். பிறகு என்ன நடந்தது, அரசே! நந்தினியை மறுபடியும் தாங்கள் சந்திக்கவே இல்லையா? வீரபாண்டியனுக்காக உருகினவள் எப்படிக் கிழவர் பழுவேட்டரையரை மணந்தாள் என்று அவளைக் கேட்கவே இல்லையா?”

“வீரபாண்டியனைக் கொன்ற இரவில் வெற்றிக் கோலாகலங்களுக்குப் பிறகு நீங்கள் எல்லாரும் பாசறைகளில் படுத்துத் தூங்கினீர்கள். எனக்கோ தூக்கம் வரவேயில்லை. அவளை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று என் உடம்பிலுள்ள ஒவ்வொரு நரம்பும் துடித்தது. அவளைப் பார்த்து ஏதேனும் சமாதானம் சொல்ல வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விரும்பினேன். மற்றொரு சமயம் அவள் பேரில் எனக்குப் பொங்கி எழுந்த கோபத்தைக் கொட்ட வேண்டும் என்று ஆவேசம் உண்டாயிற்று. எப்படியாவது அவளைப் பார்த்தாலொழிய மனநிம்மதி ஏற்படாது, சோழ நாட்டுக்குத் திரும்பிப் போக முடியாது என்று தோன்றியது. 

ஆகையால், நள்ளிரவில் நீங்கள் யாரும் அறியாமல் பாசறையிலிருந்து புறப்பட்டுக் குதிரை ஏறிச் சென்றேன். வைகை நதியின் நடுவிலிருந்த தீவை அடைந்தேன். மனம் பதைபதைக்க, உடம்பெல்லாம் நடுங்க, கால்கள் தள்ளாட, குதிரையிலிருந்து இறங்கி, மெள்ள மெள்ள நடந்து பெருமாள் கோயிலுக்கு அருகில் சென்றேன். அங்கேயிருந்த குடிசைகள் எல்லாம் எரிந்து சாம்பலாகிக் கிடப்பதைக் கண்டேன். ஒரு வயோதிகரும் வயோதிக ஸ்திரீயும் எரிந்த குடிசைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சென்று பார்த்ததில் அவர்கள்தான் முன்னொரு தடவை நந்தினியைப் பழையாறை அரண்மனைத் தோட்டத்துக்கு அழைத்து வந்தவர்கள் என்று தெரிந்தது. என்னைப் பார்த்ததும் அவர்களுடைய துக்கமும் பீதியும் பன்மடங்கு ஆயின.

முதலில் அவர்களால் எதுவுமே பேச முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைத் தைரியப்படுத்தி விசாரித்தேன். ஆற்றுக்கு அக்கரையில் இருந்த கிராமத்தில் அவர்களுடைய மூத்த குமாரி இருந்தாளாம். அவளுக்குப் பிரசவ காலம் என்று அறிந்து அவளைப் பார்த்து வரப் போயிருந்தார்களாம். நந்தினி அவர்களுடன் வர மறுத்து விட்டாளாம். மனம் போனபடி நடந்து பழக்கமுள்ள அந்தப் பிடிவாதக்காரப் பெண்ணை ஒன்றும் செய்ய முடியாமல் அவர்கள் மட்டும் போய் விட்டுத் திரும்பி வந்தார்களாம். வழியில் யாரோ சில முரடர்கள் ஒரு பெண்ணைக் காலையும் கையையும் கட்டி, எரிந்து கொண்டிருந்த சிதையில் பலவந்தமாகப் போட முயன்றதை அவர்கள் பார்த்தார்களாம். யுத்த காலத்தில் இத்தகைய விபரீதங்கள் நடப்பது இயல்பு என்று எண்ணி அவர்களுக்கு அருகில் போகவும் பயந்து கொண்டு விரைவாக இங்கே வந்து சேர்ந்தார்களாம்.

 வந்து பார்த்தால் குடிசைகள் பற்றி எரிந்து கிடந்தனவாம். நந்தினியையும் காணவில்லையாம். இந்த விவரத்தைச் சொல்லிவிட்டு அர்ச்சகரும் அவர் மனைவியும், ‘இளவரசே! எங்கள் மகள் எங்கே? எங்கள் அருமைக் குமாரி எங்கே?’ என்று கதறினார்கள். அவர்கள் நந்தினியின் உண்மைப் பெற்றோர்கள் அல்லவென்று எனக்கு முன்னமே தெரிந்திருந்தது. இப்போது அது சர்வ நிச்சயமாயிற்று. உண்மையில் பெற்றவர்களாயிருந்தால் இப்படித் தனியாக விட்டு விட்டுப் போயிருப்பார்களா? ஆகையால் அவர்கள் பேரில் எனக்கு இரக்கமோ அனுதாபமோ உண்டாகவில்லை. நந்தினியின் கதியைப் பற்றிச் சொல்ல முடியாத துக்கம் ஏற்பட்டு நெஞ்சை அடைத்தது. ‘உங்கள் மகள் எரிந்த சிதையைத் தேடிப் போய் நீங்களும் எரிந்து செத்துப் போங்கள்!’ என்று வயிற்றெரிச்சல் தீர அவர்களைச் சபித்து விட்டு, திரும்பிப் பொழுது விடிவதற்குள் பாசறைக்கு வந்து சேர்ந்தேன். நீங்கள் எல்லாரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள். நான் போனது, திரும்பி வந்தது ஒன்றும் உங்களில் யாருக்கும் தெரியாது…”

“ஆம்; இளவரசே! தெரியாதுதான். அதற்குப் பிறகும் இத்தனை காலமாக இதையெல்லாம் தங்கள் மனத்திலேயே வைத்துக் கொண்டிருந்ததை நினைத்தால் வியப்பாயிருக்கிறது. சிநேக தர்மத்துக்கு இவ்வளவு மாறாகத் தாங்கள் நடந்து கொள்வீர்கள் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. தங்களுடைய நிலையில் நான் இருந்திருந்தால் தங்களிடம் சொல்லாமல் இருந்திருக்க மாட்டேன்” என்றான் பார்த்திபன்.

“ஆனால் நீ என்னுடைய நிலையில் இல்லையே, பார்த்திபா! இந்த உலகில் யாருமே என்னுடைய நிலையில் இருந்திருக்க முடியாது. என் நிலையில் இருந்திருந்தால், நீ எப்படி நடந்து கொண்டிருப்பாய் என்று யார் சொல்ல முடியும்?” என்றான் கரிகாலன்.

“அரசே! நடந்து போனதைப் பற்றி இப்போது நமக்குள் விவாதம் வேண்டாம். அப்புறம் என்ன நடந்தது? நந்தினியைப் பிறகு எப்போது பார்த்தீர்கள்? பழுவூர் இளையராணி ஆன பிறகா? அதற்கு முன்னமேயா?”

“அதற்கு முன்னால் நான் பார்த்திருந்தால், அவள் பழுவூர் ராணி ஆகியிருக்கமாட்டாள். பழுவேட்டரையரின் கலியாணம் நடந்தபோது நானும் நீயும் ஊரில் இல்லை. அந்தச் செய்தி வந்தபோது நாம் இருவரும் அருவருப்போடு பேசிக் கொண்டது உனக்கு நினைவில் இருக்குமே? அதற்குச் சில நாளைக்குப் பிறகு எனக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம் நடந்தது. அடுத்த பட்டம் யாருக்கு என்பதைப் பற்றிச் சந்தேகம் எதுவும் இருக்கக் கூடாது என்றுதான் என் தந்தையும் பாட்டியும் மற்ற பெரியோர்களும் சேர்ந்து அந்த ஏற்பாடு செய்தார்கள். 

மதுராந்தகனுக்கு யாராவது துர்ப்போதனை செய்து தூபம் போட்டு விடப் போகிறார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருந்ததோ என்னமோ? இளவரசுப் பட்டம் கட்டியதோடு, பரகேசரிப் பட்டம் அளித்து என் பெயராலேயே கல்வெட்டு சாஸனம் ஏற்படுத்தும் உரிமையையும் அளித்தார்கள். ‘இனி இச்சோழ சாம்ராஜ்யத்தை ஆளும் பொறுப்பு முழுதும் உனக்கே’ என்று என் அருமைத் தந்தை மனதார, வாயாரக் கூறினார். அதை நாட்டார், நகரத்தார், அமைச்சர்கள், தளபதிகள் அனைவரும் ஒப்புக் கொண்டு ஜயகோஷம் செய்தார்கள். இந்தக் கோலாகலத்தில் நான் நந்தினியை அடியோடு மறந்திருந்தேன். ஆனால் பட்டாபிஷேகச் சடங்கு நடந்து முடிந்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவளை நான் என்றும் மறக்க முடியாத சம்பவம் நேர்ந்தது.

“பழமையான சோழர் குலத்து மணிமகுடத்துடன் என்னைச் சக்கரவர்த்தி அந்தப்புரத்துக்கு அழைத்துப் போனார். என் அன்னையிடமும் பாட்டியிடமும் மற்ற அந்தப்புர மாதரிடமும் ஆசி பெறுவதற்காக அழைத்துப் போனார். என்னைத் தொடர்ந்து என் சகோதரனும் முதன் மந்திரியும் பழுவேட்டரையர்களும் வந்தார்கள். அந்தப்புரத்தில் வயது மிகுந்த தாய்மார்களோடு, என் தங்கையும் அவளுடைய தோழிகளும் மற்றும் பல இளமங்கையரும் கூட்டமாக நின்றார்கள். எல்லாரும் ஆடை ஆபரணங்களினால் ஜொலித்துக் கொண்டு மகிழ்ச்சியினால் மலர்ந்த முகங்களோடு எங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு நின்றார்கள். 

ஆனால் அத்தனை முகங்களிலும் ஒரே ஒரு முகந்தான் என் கண்ணுக்குத் தெரிந்தது, அது நந்தினியின் முகந்தான். எரிந்து சாம்பராய்ப் போனாள் என்று நான் எண்ணியிருந்த என் இதய தேவதை தான் அவள்! அந்த அரண்மனை அந்தப்புரத்துக்குள் அவள் எப்படி வந்தாள்? அவ்வளவு பிரமாதமான ஆடை அலங்காரங்களுடன் ராணிகளுக்குள் நடுநாயகமான மகாராணியாக அங்கே எப்படி நிற்கிறாள்? அவள் முகத்தில்தான் என்ன மந்தகாஸம்? அவளுடைய சௌந்தரியம் முன்னைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாயிருப்பது எப்படி? சில கண நேரத்திற்குள் என் உள்ளம் பற்பல ஆகாசக் கோட்டைகளைக் கட்டிவிட்டது! சோழ சாம்ராஜ்யத்திற்கு உரியவன் என்று நான் முடிசூட்டிக் கொண்ட அன்றைய தினம் உண்மையிலேயே என் வாழ்நாளில் அதிர்ஷ்ட தினம் ஆகப் போகிறதா? என் உள்ளத்தைக் கவர்ந்த ராணியை என் பட்ட மகிஷியாகவும் அடையப் போகிறேனா? ஏதோ, ஓர் அதிசயமான இந்திர ஜாலத்தினால், மந்திர சக்தியினால், அவ்விதம் நடக்கப் போகிறதா?… இப்படி நான் எண்ணிக் கொண்டிருக்கையில் என் அன்னை வானமாதேவி முன்னால் இரண்டு அடி நடந்து வந்து ‘குழந்தாய்!’ என்று சொல்லி என்னை ஆசீர்வதித்து உச்சி மோந்தாள்! அதே சமயத்தில் யாரும் எதிர்பாராத அச்சம்பவம் நடந்து விட்டது. 

என் தந்தை ‘ஆ!’ என்று ஒரு கூச்சலிட்டு விட்டுத் திடீரென்று தரையில் சுருண்டு விழுந்து மூர்ச்சை அடைந்தார். உடனே, அவ்விடத்தில் பெருங்குழப்பமாகிவிட்டது. நானும் மற்ற எல்லாரும் சக்கரவர்த்தியைத் தூக்கி உட்கார வைத்து மூர்ச்சை வெளிவிப்பதில் கவனம் செலுத்தினோம். என் அன்னையையும், பாட்டி செம்பியன் மாதேவியையும் தவிர மற்ற மாதர் அனைவரும் உள்ளே சென்று விட்டார்கள். தந்தைக்குச் சீக்கிரத்தில் மூர்ச்சை வெளிந்து விட்டது.

“என் சகோதரி குந்தவையைத் தனி இடத்துக்கு நான் அழைத்துச் சென்று, ‘நந்தினி அங்கே எப்படி வந்தாள்?’ என்று கேட்டேன். நந்தினி பெரிய பழுவேட்டரையரை மணந்து கொண்டு இப்போது பழுவூர் இளையராணியாக விளங்குகிறாள் என்று குந்தவை சொன்னாள். என் நெஞ்சில் கூரிய ஈட்டி பாய்ந்தது. நண்பா! போர்க்களங்களில் எத்தனையோ முறை நான் காயம் பட்டதுண்டு. ஆனால், ‘நந்தினிதான் பழுவூர் இளையராணி’ என்று குந்தவை கூறியதனால் என் நெஞ்சில் ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை!’ என்று ஆதித்த கரிகாலன் கூறித் தன்னுடைய நெஞ்சை அமுக்கிப் பிடித்துக் கொண்டான். நெஞ்சில் அவனுக்கு இன்னும் வலி இருந்து வந்தது என்பது நன்றாய்த் தெரிந்தது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன்னியின் செல்வன் பாகம் 01  - Page 4 Empty Re: பொன்னியின் செல்வன் பாகம் 01

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Nov 2015 - 6:59

அத்தியாயம் 57 – மாய மோகினி
-----------
ஆரம்பத்திலிருந்து அவ்வளவாக அனுதாபம் இல்லாமலே கரிகாலன் கதையைக் கேட்டுக் கொண்டு வந்த பார்த்திபனுக்கும் இப்போது நெஞ்சு உருகி விட்டது. தன்னுடைய கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

“அரசே! ஒரு பெண்ணின் பேரில் ஏற்பட்ட காதலினால் இப்படிப்பட்ட துன்பம் உண்டாகக் கூடும் என்று நான் கனவிலும் கருதியதில்லை! இளவரசுப் பட்டாபிஷேகம் நடந்த அன்று இப்படி ஓர் அனுபவம் தங்களுக்கு நேர்ந்தது என்று எங்களுக்கெல்லாம் தெரியாது. ஆகையால், தாங்கள் மனச்சோர்வுடன் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம். என்னவெல்லாமோ பரிகாசப் பேச்சுகள் பேசித் தங்களைச் சந்தோஷப்படுத்தப் பார்த்தோம். அதெல்லாம் இப்போது எனக்கு நினைவு வருகிறது!” என்றான்.

“ஆம்; நீங்கள் பரிகாசப் பேச்சுப் பேசினீர்கள். என்னை உற்சாகப்படுத்தப் பார்த்தீர்கள். என்னுடைய ஆட்சிக் காலத்தில் நான் செய்யப் போகும் மகத்தான காரியங்களைப் பற்றி பேசினீர்கள். இலங்கையிலிருந்து இமயம் வரையில் சோழ சாம்ராஜ்யத்தை அன்றைய தினமே விஸ்தரித்து விட்டீர்கள்! இன்னும், கடல் கடந்து சென்றும் இராஜ்யங்களைக் கைப்பற்றினீர்கள். அந்தப் பேச்செல்லாம் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவ்வளவும் எனக்கு எவ்வளவு துன்பமளித்தது என்பதும் நினைவிருக்கிறது.

பிறகு ஒரு நாள் என்னை நந்தினி பழுவூர் அரண்மனைக்குக் கூப்பிட்டு அனுப்பினாள். போகலாமா, வேண்டாமா என்று என் மனத்தில் ஒரு போராட்டம் எழுந்தது. கடைசியில், போவதென்று முடிவு செய்தேன். பல விஷயங்களில் எனக்குத் தோன்றியிருந்த ஐயங்களை அவளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினேன். அவளுடைய பிறப்பின் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினேன். அந்தப்புரத்தில் என் தந்தை அன்று மூர்ச்சை அடைந்து விழுந்ததற்கும் அங்கே நந்தினியை அவர் அகஸ்மாத்தாகக் கண்டதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகங்கூட என் மனத்தில் தோன்றியிருந்தது. அன்றைய தினம் சக்கரவர்த்திக்கு விரைவில் மூர்ச்சை வெளிந்து விட்டதாயினும் மறுபடி அவர் பழைய ஆரோக்கியத்தை அடையவேயில்லை என்பது உனக்கு நினைவிருக்கும்.

நந்தினியுடன் பேசுவதிலிருந்து எனக்கு அதுவரை விளங்காத மர்மம் ஏதேனும் வெளியாகலாம் என்று எண்ணினேன். இதையெல்லாம் ஒரு வியாஜமாக வைத்துக் கொண்டேனே தவிர, உண்மையில் நான் சென்ற காரணம், அவளிடமிருந்த காந்த சக்திதான். வேறு காரணங்களைக் கற்பித்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டு சென்றேன். பழுவேட்டரையர் ஊரில் இல்லை. அவருடைய அரண்மனையில் என்னைத் தடுப்பாரும் இல்லை; எனக்கும் நந்தினிக்கும் ஏற்பட்டிருந்த பழைய சிநேகிதத்தைப் பற்றி அங்கே அறிந்தவர்களும் இல்லை. இளவரசுப் பட்டம் கட்டிக் கொண்ட ராஜகுமாரன் பழுவூர் அரண்மனை ராணிமார்களிடம் ஆசி பெறுவதற்காக வருவதாகவே நினைத்தார்கள்.

அரண்மனைத் தோட்டத்தில் உள்ள லதா மண்டபத்தில் நந்தினியை நான் சந்தித்தேன். பார்த்திபா! கடற்பிரயாணம் செய்வோரின் அனுபவங்களை நீ கேட்டிருக்கிறாய் அல்லவா? சமுத்திரத்தில் சில இடங்களில் அளவில்லாத சக்தியுடனும் வேகத்துடனும் கூடிய நீரோட்டங்கள் இருக்குமாம். அந்த நீரோட்டங்களில் கப்பல்கள் அகப்பட்டுக் கொண்டால் சிறிது நேரத்தில் சுக்குச் சுக்காகப் போய்விடுமாம். நந்தினியின் முன்னிலையில் நான் இருந்தபோது, கடல் நீரோட்டத்தில் அகப்பட்டுக் கொண்ட கப்பலின் கதியை அடைந்தேன். என் உடல், உள்ளம், இருதயம் எல்லாம் ஆயிரம் சுக்கல்களாகி விட்டன. என்னுடைய நாவிலே வந்த வார்த்தைகள் எனக்கே வியப்பை அளித்தன! ‘ஐயோ! இது என்ன இப்படிப் பேசுகிறோம்?’ என்று நெஞ்சில் ஒரு பக்கம் தோன்றிக் கொண்டிருந்தபோது, வாய் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தது. எனக்கு இளவரசுப் பட்டம் சூட்டியதைப் பற்றி நந்தினி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.

‘எனக்கு அதில் ஒன்றும் மகிழ்ச்சி இல்லை!’ என்றேன்.

‘ஏன்?’ என்று கேட்டாள்.

‘இது என்ன கேள்வி கேட்கிறாய்? எனக்கு எவ்வாறு மகிழ்ச்சி இருக்கும்? நீதான் இப்படி அநியாயம் செய்து விட்டாயே?’ என்றேன். நான் சொல்வது அவளுக்கு விளங்காதது போல நடித்தாள். இவ்விதம் பேச்சு வளர்ந்து கொண்டே போயிற்று. என் அன்பை நிராகரித்தது பற்றியும், வீரபாண்டியனைக் காதலித்தது பற்றியும் அவள் மீது நான் குற்றம் சாட்டினேன். கிழவர் பழுவேட்டரையரை மணந்தது பற்றியும் குத்தலாகப் பேசினேன்.

‘இளவரசே! முதலில் தாங்கள் என் காதலைக் கொன்றீர்கள்; பிறகு என்னைக் காதலித்தவனை என் கண் முன்னால் கொன்றீர்கள்; என்னையும் கொன்றாலொழியத் தங்கள் மனம் திருப்தியடையாது போலிருக்கிறது. நான் உயிரோடிருப்பதே தங்களுக்குப் பிடிக்கவில்லை. நல்லது; என்னையும் கொன்று தங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்!’ என்று சொல்லித் தன்னுடைய இடுப்பில் செருகியிருந்த சிறிய கத்தியை எடுத்து நீட்டினாள்.

‘நான் ஏன் உன்னைக் கொல்கிறேன்? நீயல்லவா என்னை உயிரோடு வதைத்துக் கொண்டிருக்கிறாய்!’ என்றேன்.

கடைசியில், இப்போது நினைத்துப் பார்த்தாலும் வெட்கம் தருகிற வார்த்தைகளை என் வாய் சொல்லிற்று. ‘இன்னமுங்கூட மோசம் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. ஒரு வார்த்தை சொல்லு! இந்த கிழவனை விட்டு விட்டு வந்துவிடுவதாகச் சொல்லு! உனக்காக நான் இந்த ராஜ்யத்தை விட்டு வந்துவிடுகிறேன். இருவரும் கப்பல் ஏறிக் கடல் கடந்து தூர தேசத்துக்குப் போய் விடுவோம்!’ என்றேன்.

நந்தினி அதைக் கேட்டுப் பயங்கரமாகச் சிரித்தாள். அதை நினைத்தால் இப்போது கூட எனக்கு ரோமம் சிலிர்க்கிறது. ‘கடல் கடந்து தூர தேசத்துக்குப் போய் நாம் என்ன செய்வது என்கிறீர்கள்? விறகு வெட்டிப் பிழைக்கவா? அல்லது வாழைத் தோட்டம் போட்டுப் பிழைக்கவா?’ என்றாள். ‘அதெல்லாம் உனக்குப் பிடிக்காதுதான்! அர்ச்சகர் வீட்டில் வளர்ந்தவள் பழுவூர் ராணி ஆகிவிட்டாய் அல்லவா?’ என்றேன்.

‘இதோடு திருப்தியடைவதாக எண்ணம் இல்லை. சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் சக்கரவர்த்தினியாக வீற்றிருப்பதாக உத்தேசம். தங்களுக்கு இஷ்டமிருந்தால் சொல்லுங்கள், பழுவேட்டரையர் இருவரையும் கொன்றுவிட்டு, சுந்தர சோழரைச் சிறையில் அடைத்து விட்டு, சக்கரவர்த்தியாகி என்னைத் தங்கள் பட்டமகிஷியாக்கிக் கொள்கிறதாயிருந்தால் சொல்லுங்கள்!’ என்றாள். ‘ஐயோ! என்ன பயங்கரமான வார்த்தைகளைச் சொல்கிறாய்?’ என்றேன். ‘காயமடைந்து படுத்துக் கிடந்த பாண்டியனை என் கண் முன்னால் கொன்றது பயங்கரமான காரியமில்லையா?’ என்று நந்தினி கேட்டாள். இதனால் என் குரோதம் கொழுந்து விடத் தொடங்கியது. ஏதேதோ வெறி கொண்ட வார்த்தைகளை உளறி அவளை நிந்தித்துவிட்டுக் கிளம்பினேன். அப்போதும் அவள் என்னை விடவில்லை. ‘இளவரசே! எப்போதாவது தங்களுடைய மனத்தை மாற்றிக் கொண்டால் என்னிடம் திரும்பி வாருங்கள். என்னைச் சக்கரவர்த்தினியாக்கிக் கொள்ளத் தங்கள் மனம் இடம் கொடுக்கும் போது வாருங்கள்!’ என்றாள். அன்று அவளை விட்டுப் பிரிந்தவன் பிறகு அவளைப் பார்க்கவே இல்லை!’ என்றான் ஆதித்த கரிகாலன்.

இதையெல்லாம் கேட்டுப் பயங்கரமும் திகைப்பும் அடைந்த பார்த்திபேந்திரன், “அரசே! இப்படியும் ஒரு ராட்சஷி உலகில் இருக்க முடியுமா? அவளைத் தாங்கள் மறுபடி சந்திக்காததே நல்லதாய்ப் போயிற்று!” என்று கூறிப் பெருமூச்சு விட்டான்.

“அவளை நான் போய்ப் பார்க்கவில்லை என்பது சரிதான்! ஆனால் அவள் என்னை விட்டபாடில்லை. பல்லவா! இரவும் பகலும் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து என்னை வதைக்கிறாள். பகலில் நினைவிலே வருகிறாள். இரவில் கனவிலே வருகிறாள். ஒரு சமயம் முகத்தில் மோகனப் புன்னகையுடன் என்னைக் கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வருகிறாள். இன்னொரு சமயம் கையில் கூரிய கத்தியுடன் என்னைக் குத்திக் கொல்ல வருகிறாள். ஒரு சமயம் கண்களில் கண்ணீர் பெருக்கி விம்மிக் கொண்டு வருகிறாள். வேறொரு சமயம் தலைவிரி கோலமாய்க் கன்னங்களைக் கை விரல்களினால் பிறாண்டிக் கொண்டும் அலறி அழுது கொண்டும் வருகிறாள். ஒரு சமயம் பைத்தியம் பிடித்தவளைப் போல் பயங்கரமாய்ச் சிரித்துக் கொண்டும் வருகிறாள். இன்னொரு சமயம் அமைதியான முகத்துடன் ஆறுதல் சொல்ல வருகிறாள். கடவுளே! அந்தப் பாதகி என்னை எப்படித்தான் வதைக்கிறாள் என்று சொல்லி முடியாது. இன்று மாலை பாட்டன் கூறியது நினைவிருக்கிறதா! நான் ஏன் தஞ்சை போகக் கூடாது என்பதற்கு ஏதேதோ காரணம் கூறினார். உண்மையில் நான் தஞ்சை போகாமலிருப்பதற்கும் என் தந்தையைக் காஞ்சிக்கு வரவழைக்க விரும்புவதற்கும் காரணம் நந்தினிதான்…”

“அரசே! கேவலம் ஒரு பெண்ணுக்குப் பயந்து கொண்டா தஞ்சைக்குப் போகாமலிருக்கிறீர்கள்? அப்படி அவள் என்ன தான் செய்து விடுவாள்? வஞ்சனையாக விஷம் வைத்துத் தங்களைக் கொன்று விடுவாள் என்று அஞ்சுகிறீர்களா?…….”

“இல்லை, பார்த்திபா, இல்லை! இன்னமும் என்னை நீ நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை. அவள் என்னைக் கொன்று விடுவாள் என்பதற்காக நான் அஞ்சவில்லை. அவளுடைய இஷ்டப்படி என்னைச் செய்ய வைத்து விடுவாளோ என்றுதான் பயப்படுகிறேன். ‘உன் தந்தையைச் சிறையில் போடு!’ ‘உன் தங்கையை நாட்டை விட்டுத் துரத்து!’ ‘இந்தக் கிழவனைக் கொன்று என்னைச் சிம்மாசனத்தில் ஏற்று!’ என்று அந்த மாயமோகினி மறுமுறை சொன்னால், எனக்கு அப்படியெல்லாம் செய்யத் தோன்றிவிடுமோ என்று பயப்படுகிறேன். நண்பா! ஒன்று நந்தினி சாக வேண்டும்; அல்லது நான் சாக வேண்டும்; அல்லது இரண்டு பேரும் சாக வேண்டும். இல்லாவிடில் இந்த ஜன்மத்தில் எனக்கு மன அமைதி கிடையாது!” என்றான் கரிகாலன்.

“அரசே! இது என்ன பேச்சு? தாங்கள் ஏன் சாக வேண்டும்? எனக்கு அனுமதி கொடுங்கள்! இலங்கைக்கு அப்புறம் போகிறேன். உடனே தஞ்சாவூர் சென்று அவளைக் கொன்றுவிட்டு வருகிறேன். ஸ்திரீ ஹத்தி தோஷம் எனக்கு வந்தால் வரட்டும்..”

“அப்படி ஏதாவது செய்தால் உன்னை என் பரம வைரியாகக் கருதுவேன். நந்தினியைக் கொல்லத் தான் வேண்டுமென்றால், என்னுடைய இந்தக் கையினாலேயே அவளைக் கொல்லுவேன். கொன்றுவிட்டு என்னையும் கொன்று கொண்டு மாளுவேன்! வேறொருவர் அவளுடைய சுண்டு விரலின் நகத்துக்குக் கேடு செய்வதையும் என்னால் பொறுக்க முடியாது! நண்பா! நீ நந்தினியை மறந்துவிடு! அவளைப் பற்றி நான் சொன்னதெல்லாவற்றையும் மறந்துவிடு! பாட்டன் சொன்னபடி நீ நாளைக்கே புறப்பட்டு இலங்கைக்குப் போ! என் சகோதரன் அருள்மொழியை எப்படியாவது வற்புறுத்தி இங்கே அழைத்து வா! அவனை இங்கே இருக்கச் செய்வோம். பாட்டனும் பேரனும் யோசித்து என்ன வேணுமோ செய்து கொள்ளட்டும். நாம் இலங்கைக்குச் செல்வோம், மீண்டும் கப்பல் ஏறிப் பெரும்படையுடன் கீழைக் கடல்களில் செல்வோம். சாவகம், புஷ்பகம், கடாரம் முதலிய தேசங்களுக்குச் சென்று வெற்றிக் கொடி நாட்டுவோம். பிறகு மேற்கே திரும்புவோம். அரபு, பாரஸீகம், மிசிரம் முதலிய நாடுகளுக்குச் சென்று அங்கெல்லாம் தமிழர் வீரத்தையும் புலிக் கொடியையும் நிலைநாட்டுவோம். பார்த்திபா! அந்த நாடுகளில் எல்லாம் கற்பு என்னும் கட்டுப்பாடு இந்த நாட்டில் உள்ளது போல் கிடையாது என்பது உனக்குத் தெரியுமா? அரசர்கள் தங்கள் இஷ்டம்போல் அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள எந்தப் பெண்ணையும் அழைத்துச் சென்று அந்தப்புரத்தில் சேர்த்துக் கொள்வார்களாம்!…..” என்றான் கரிகாலன்.

பார்த்திபன் இதற்கு மறு மொழி சொல்லுவதற்குள் திருக்கோவலூர் மலையமான் அங்கு வந்து சேர்ந்தார். “அரவான் கதையைப் போல் அற்புதமான கதை இந்த உலகத்திலேயே கிடையாது. நீ இப்போது சொல்லிக் கொண்டிருந்த எந்த நாட்டிலும் கிடையாது. ஆனால் இன்னுமா நீங்கள் தூங்காமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? பார்த்திபேந்திரா! நாளைக்கு இலங்கைக்குப் புறப்பட வேண்டும் என்பது உனக்கு நினைவிருக்கிறதல்லவா?” என்றார்.

“அதைப் பற்றித்தான் தூங்காமல் பேசிக் கொண்டிருக்கிறோம்!” என்றான் பார்த்திபேந்திரன்.

-----
முதலாம் பாகம் முற்றும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன்னியின் செல்வன் பாகம் 01  - Page 4 Empty Re: பொன்னியின் செல்வன் பாகம் 01

Post by நேசமுடன் ஹாசிம் Wed 11 Nov 2015 - 7:42

மிக்க நன்றிகள் அண்ணா அபாரமான தொகுப்பு இவைகள் எம் களஞ்சியத்தில் பாதுகாக்கப்படுகிறது அவசியம் நேரம் வரும் போது திறந்து பார்த்திட ஏதுவாக அமையும் உண்மையில் அத்தனை அங்கங்களையும் படித்து முடிக்கும் அளவு நேரம் பத்தவில்லை ஆனால் ஆரம்பித்துவிட்டேன் 
அனைத்து லிங்குகளும் கொடுத்தாகிவிட்டது அடுத்த பகுதியையும் தொடருங்கள் ஆரம்ப பதிவில் இந்த தொகுப்பில் கொடுத்ததுபோல் அனைத்து தலைப்புகளையும் இடுங்கள் லிங் கொடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் நன்றி நன்றி


பொன்னியின் செல்வன் பாகம் 01  - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பொன்னியின் செல்வன் பாகம் 01  - Page 4 Empty Re: பொன்னியின் செல்வன் பாகம் 01

Post by Nisha Wed 11 Nov 2015 - 12:43

அம்மாடியோவ்! அசத்தல் அசத்தல்!

பொன்னியின் செல்வன் முதல் பாகம் நம் சேனையில் பெரிய எழுத்தில் படிக்க கிடைப்பதே  பெரிய விடயம்.  அடுத்தடுத்த பாகங்களையும் பகிருங்கள் இனியவன் சார். 

அடுத்த பாகம் தனித்திரி தொடங்கி பாகம் இரண்டு என தலைப்பிட்டு பகிருங்கள். நம் நிர்வாகிகள் நூலகம் பகுதியில்   பொன்னியின் செல்வனுக்கு என தனி போல்ரர் இட்டு தருவார்கள்.  அதனுள் அனைத்து  பாகங்களையும் சேர்ப்போம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொன்னியின் செல்வன் பாகம் 01  - Page 4 Empty Re: பொன்னியின் செல்வன் பாகம் 01

Post by Nisha Wed 11 Nov 2015 - 12:44

லிங்க் இணைத்த பணியை திறம்பட செய்தமைக்காக எங்கள் ஹாசிமுக்கு பெரிய்ய்ய்ய்ய ஓ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொன்னியின் செல்வன் பாகம் 01  - Page 4 Empty Re: பொன்னியின் செல்வன் பாகம் 01

Post by கவிப்புயல் இனியவன் Wed 11 Nov 2015 - 14:50

Nisha wrote:அம்மாடியோவ்! அசத்தல் அசத்தல்!

பொன்னியின் செல்வன் முதல் பாகம் நம் சேனையில் பெரிய எழுத்தில் படிக்க கிடைப்பதே  பெரிய விடயம்.  அடுத்தடுத்த பாகங்களையும் பகிருங்கள் இனியவன் சார். 

அடுத்த பாகம் தனித்திரி தொடங்கி பாகம் இரண்டு என தலைப்பிட்டு பகிருங்கள். நம் நிர்வாகிகள் நூலகம் பகுதியில்   பொன்னியின் செல்வனுக்கு என தனி போல்ரர் இட்டு தருவார்கள்.  அதனுள் அனைத்து  பாகங்களையும் சேர்ப்போம்.
ஆம்  
ஆரம்பிப்பேன் தனி திரியில் ஆரம்பிக்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பொன்னியின் செல்வன் பாகம் 01  - Page 4 Empty Re: பொன்னியின் செல்வன் பாகம் 01

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum